பெரும்போக வெங்காயச் செய்கை குடாநாட்டில் ஆபத்தில்!

Saturday, December 2nd, 2017

யாழ்ப்பாண மாவட்டத்தில் பெரும்போக வெங்காயப் பயிர்ச் செய்கைக்கான விதை வெங்காயம் 50 கிலோ 20 ஆயிரம் ரூபாவுக்கு மேல் அதிகரித்துள்ளது. இந்த நிலமையில் இந்தவருடம் பெரும்போக வெங்காயப் பயிர்ச் செய்கையில் ஈடுபடமுடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;

யாழ்ப்பாண மாவட்டத்தில் காலபோகத்தின் போது வெங்காயச்செய்கை பெருமளவில் மேற்கொள்ளப்படுவது வழமை. சின்ன வெங்காயம், வேதாள வெங்காயம் என இரண்டு வகையான வெங்காயப்பயிர்ச்செய்கை மேற்கொள்வர். இந்த வெங்காயங்களை அறுவடை செய்து களஞ்சியப்படுத்தி உறங்கு காலம் நிறைவடைந்த நிலையில் விதையாக நடுகை செய்வர்.

இந்த வருடம் சிறுபோக வெங்காயச் செய்கை கடும் வரட்சி மற்றும் காலநிலை முரண்பாடுகளினால் பாதிப்படைந்த நிலையில் விதை வெங்காயமாக களஞ்சியப்படுத்தப்படவில்லை. விதை வெங்காயத்தின் விலை தற்போது 50 கிலோ 20 ஆயிரம் ரூபா வரை அதிகரித்து இருப்பதோடு தேவையான அளவுக்கு பெற்றுக் கொள்ளமுடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

உள்ளூர் சந்தைகளில் 1 கிலோ யாழ்ப்பாண வெங்காயத்தின் விலை 400 ரூபா தொடக்கம் 500 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்றது. உரிய அளவு விதை வெங்காயத்தைப் பெற்றுக்கொள்ள முடியாத இக்கட்டான நிலை யாழ்ப்பாண மாவட்ட மரபு வழி செய்கையில் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்துகின்றது எனவும் வெங்காயப் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளையும் மனஉளைச்சலுக்கு உள்ளாக்கி இருக்கின்றது எனவும் தெரிவிக்கப்பட்டது.

Related posts: