புதிய அரசியல் யாப்பில் தமிழர்களது அபிலாஷைகள் உள்ளடக்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன்!

Wednesday, February 8th, 2017
அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டு வருகின்ற புதிய அரசியல் யாப்பில் தமிழ் பேசும் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையிலான அரசியல் அபிலாஷைகள் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதே எமது விருப்பமும் உறுதியான எதிர்பார்ப்புமாகும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் கிளிநொச்சி மாவட்ட கட்சியின் நிர்வாக உறுப்பினர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் –
சோல்பெரி அரசியல் அமைப்பிலிருந்து 1972 ஆம் ஆண்டு மற்றும் 1978 ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்புகளில் தமிழ் பேசும் மக்களில் அரசியல் அபிலாசைகளோ உணர்வுகளோ அல்லது கருத்துக்களோ உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.
அவ்வாறு உள்ளவாங்கியிருந்தால் தமிழ் பேசும் மக்கள் இரண்டாம் தரப் பிரையைகளாக இருக்கவேண்டிய நிலை உருவாகியிருக்காது. இந்த நாட்டில் இரத்த ஆறும் பெருக்கெடுத்து ஓடியிருக்காது .எமது மக்கள் அவலங்களையும் துயரங்களையும் சந்திக்கவேண்டிய கொடிய சூழலும் உருவாகியிருக்காது.
ஆகவே கடந்த கால அனுபவங்களை கருத்தில் கொண்டு இன்று உருவாக்கப்பட்டுவரும் புதிய அரசியல் யாப்பில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகள் உள்வாங்கப்படவேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும்.

DSC04311

ஆட்சி மாற்றத்தின் பின்னர் நாடாளுமன்றம் அரசியல் அமைப்பு நிர்ணய சபையாக மாற்றப்பட்டிருக்கின்றது. அதை வழிநடத்துவதற்காக ஒரு வழிநடத்தல் குழு ஒன்றும் உருவாக்கப்பட்டு அதற்கான உபகுழுக்களும் உருவாக்கப்பட்டிருப்பதை நாம் வரவேற்கின்றோம்.
ஆனாலும் இதில் தாண்டவேண்டிய இரு பெரும் தடைகள் உள்ளன. ஒன்று நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்திற்கான ஆதரவு கிடைக்கவேண்டும். அடுத்து சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மக்களின் அங்கீகாரம் பெறப்படவேண்டும்.
இந்த இரு தடைகளையும் தாண்டி புதிய அரசியல் யாப்பு வெற்றிகரமாக நிறைவேற்றப்படுமேயானால் அது எமது மக்களுக்கு கிடைக்கும் மாபெரும் அரசியல் வெற்றியாகும்.
ஆனாலும் தடைகளைத்தாண்டி அது நிறைவேறுமா என்ற சந்தேக        ங்கள் எமது மக்கள் மத்தியில் இன்று எழுந்துள்ளன.
நாம் இலங்கை அரசியல் யாப்பில் இணைக்கப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தையே முழுமையாக நடைமுறைப் படுத்துவதிலிருந்து ஆரம்பித்து எமது அரசியல் இலக்கை அடைய முடியும் என்ற கருத்தையே நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றோம்.

DSC04310

அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்டது என்பதால் 13 ஆவது திருத்தச் சட்டமானது நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெறவேண்டும் என்ற தடையையோ அல்லது சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லவேண்டும் என்ற நிலையையோ கொண்டிருக்கவேண்டிய அவசியமில்லை.
இந்நிலையில் 13 அவது திருத்தச்சட்டத்திலிருது தொடங்கும் அரசியல் வழிமுறையை நாம் ஏற்றுக்கொண்டே மறுபுறத்தில் புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்தையும் ஆதரித்து வருகின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளரும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான வை.தவநாதன், கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம்,  கட்சியின் கிளிநொச்சி மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் அமீன் இரத்தினம் ஆகியோருடன் கட்சியின் குறித்த மாவட்ட நிர்வாக உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

 

Related posts: