வெளிவிவகார அமைச்சின் நான்காவது பிராந்திய தூதரக அலுவலகம் திருகோணமலையில் திறப்பு!

Monday, March 15th, 2021

வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் நான்காவது பிராந்திய தூதரக அலுவலகம் திருகோணமலையில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இந்த அலுவலகம், வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், பிராந்திய ஒத்துழைப்பு இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர்களான கபில நுவன் அத்துகோரல, எம்.எஸ்.தெளபீக், இராசமாணிக்கம் சாணக்கியன், யதாமணி குணவர்தன, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் கொலம்பகே உட்பட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

அரச நிறுவனங்களின் செயற்பாடுகளை கிராமங்களுக்கும் கொண்டுசெல்லல் என்ற அரசாங்கத்தின் திட்டத்திற்கமைய மக்களுக்கு இலகுவான முறையில் சேவைகளைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் இந்தப் பிராந்திய தூதரக அலுவலகம் திறந்துவைக்கப்பட்டதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறிப்பிட்டுள்ள அவர், “கடந்த காலங்களில் வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக திருகோணமலைப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் பல மணித்தியாலங்களைச் செலவிட்டு கொழும்புக்கு வருகைதந்து சேவைகளைப் பெற்றுக் கொண்டார்கள். இதன்காரணமாக பல்வேறு வகையான சிரமங்களை எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டது.

எனவேதான், கிழக்கு மாகாண மக்களுக்குக் குறித்த சேவையைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் திருகோணமலையில் பிராந்திய அலுவலகம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, திருகோணமலை மாவட்டம் ரம்மியமான பிரதேசமாகக் காணப்படுவதுடன் அதிகளவான வளங்கள் நிறைந்த மாவட்டமாகக் காணப்படுகின்றது. திருகோணமலை மாவட்டத்தைப் பொருளாதாரக் கேந்திர நிலையமாக, நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்கின்ற மாவட்டமாக மாற்றியமைப்பதற்கான செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: