பிரபல மருந்தகத்துக்கு ஒரு இலட்சம் ரூபா தண்டம் – மன்னிப்புக் கேட்கவும் நீதிமன்று உத்தரவு!

Monday, July 9th, 2018

மருந்தகங்களில் விற்பனைக்குத் தடைசெய்யப்பட்ட பிசிகன் சாம்பிள் என்னும் மருந்தை விற்பனை செய்தமை மற்றும் மருந்தாளர் இல்லாது சுகாதார அமைச்சின் அனுமதி பெறாது மருந்தகம் நடத்தியமை ஆகிய குற்றங்களுக்காக பிரபல மருந்தகம் ஒன்றுக்கு ஒரு இலட்சம் ரூபா தண்டம் விதித்ததுடன் செய்த குற்றத்துக்கு மன்னிப்புக்கோரி இலங்கையில் உள்ள மும்மொழிப் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்துமாறும் யாழ்ப்பாணம் நீதிவான் மன்று கட்டளையிட்டது என்று யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதாரத் திணைக்களம் தெரிவித்தது.

குறித்த மருந்தானது மருத்துவர் ஒருவரின் கிளினிக்கில் மாத்திரமே நோயாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட முடியும். மருத்துவரின் நெறிப்படுத்தலின் கீழ் மட்டுமே குறித்த மருந்தை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறிருக்கையில் திருநெல்வேலியில் அமைந்துள்ள பிரபல மருந்தகத்தைச் சுகாதாரத் திணைக்கள உணவு மருந்துப் பரிசோதகர்கள் அண்மையில் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

இதன்போது மருந்தகம் சுகாதார அமைச்சின் அனுமதி பெறப்படாமலும் மருந்தாளர் இல்லாமலும் இயங்கியமை கண்டறியப்பட்டது. அத்துடன் குறித்த தடைசெய்யப்பட்ட மருந்து விற்பனை செய்யப்பட்டமையும் அவதானிக்கப்பட்டது. இதையடுத்து குறித்த மூன்று குற்றச்சாட்டுக்களுக்கும் எதிராக பரிசோதகர்களால் யாழ்ப்பாண நீதிவான் மன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் மன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதையடுத்து ஒரு இலட்சம் ரூபா தண்டம் விதித்ததுடன் செய்த குற்றத்துக்கு பத்திரிகையில் பகிரங்க மன்னிப்புக் கோருமாறும் உத்தரவிட்டார்.

Related posts: