நல்லூர் பிரதேச சபையின் இலவச சித்த ஆயுள் வேத வைத்தியசாலையின் திறப்பு விழா இடம்பெற்றது

Saturday, April 9th, 2016

நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கொக்குவில் பொதுச் சந்தைக்கு அண்மையில் இரண்டு மில்லியன் ரூபா செலவில் புதிதாக  நிர்மாணிக்கப்பட்டுள்ள இலவச சித்த ஆயுள் வேத வைத்தியசாலையின் திறப்பு விழா நேற்று  (08-) சபையின் செயலாளர் திருமதி- தி. அன்னலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

விழாவில் மாகாண சுதேச வைத்தியத் துறையின் பிராந்தியப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி- சி. துரைரட்ணம் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு வைத்தியசாலைக் கட்டடத்தை நாடா வெட்டிச் சம்பிராதயபூர்வமாகத் திறந்து வைத்தார். ஆசியுரையை ரட்ணேஸ்வரக் குருக்கள்  நிகழ்த்தினார்.

விழாவில் நல்லூர் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் , நல்லூர் உப அலுவலகம் மற்றும் கொக்குவில் உப அலுவலக உத்தியோகத்தர்கள், வைத்தியர்கள், நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கொக்குவில் ஆயுள் வேத வைத்தியசாலைக்கு நிரந்தரக் கட்டடமில்லாத காரணத்தால் இதுவரை காலமும் கொக்குவில் மேற்குச் சனசமூக நிலையக் கட்டடத்தில் தற்காலிகமாக இயங்கி வந்தது. தற்போது வைத்தியசாலை அமைக்கப்பட்டுள்ள காணி எங்கள் சபைக்குச் சொந்தமான காணி. இந்த வைத்தியசாலை பொதுமக்கள் அதிகளவு வாழ்கின்ற பகுதி மற்றும் சந்தை வளாகம் அமைந்துள்ள பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கூடுதலான மக்கள் வைத்திய சேவைகளைப் பெற்று நன்மை பெறுவார்கள் என நம்புகின்றேன். வைத்தியசாலையின் சூழலில் விரைவில் மூலிகைத் தோட்டம் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம்  என நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் தனது தலைமையுரையில் தெரிவித்தார்.

Related posts: