பிரதமர் தொடர்பில் முதலை கண்ணீர் வடிக்க வேண்டாம் – எதிர்க்கட்சி தலைவருக்டகு சுட்டிக்காட்டிய நீதி அமைச்சர்!

Wednesday, October 21st, 2020

பிரதமருக்கான அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளமை குறித்து நீங்கள் முதலை கண்ணீர் வடிக்க வேண்டாம் என நீதியமைச்சர் அலி சப்ரி, எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் தெரிவித்துள்ளார்.

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளது.

இன்று புதன்கிழமை காலை 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகியிருந்தன.

இதன்போது 20 வது திருத்த சட்டமூலம் குறித்த விவாதத்தினை ஆரம்பித்து வைத்து, நீதியமைச்சர் அலி சப்ரி உரையாற்றினார். இந்தநிலையில், பிரதமருக்கான அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளமை குறித்து தெளிவுபடுத்த முடியுமா என சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த நீதியமைச்சர் அலி சப்ரி, “அதனை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம். இதுகுறித்து நீங்கள் முதலைக்கண்ணீர் வடிக்க வேண்டாம். பிரதமர் மக்களினால் தெரிவு செய்யப்படுகின்றார். அவர் மக்களுக்கான சேவையினை தொடர்ந்தும் செய்வார்“ எனக் குறிப்பிட்டார்.

இதன்போது குறுக்கிட்ட எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, “பிரதமரை நீங்கள் அலுவலக உதவியாளராக மாற்றுவதற்கு முயற்சிக்கின்றீர்கள். நீங்கள் உங்கள் பிரதமரை நினைவில் கொண்டு அப்படி செய்ய முயற்சிக்க வேண்டாம்“ எனத் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து நீதியமைச்சர் உரையாற்றுவதற்கு இடமளிக்காமல் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, குழப்பத்தினை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இதற்கு எதிர்ப்பினை வெளியிட்ட ஆளும் கட்சியின் உறுப்பினர்கள், “இந்த பைத்தியக்காரனை அமரச்சொல்லுங்கள். நீதியமைச்சர் உரையாற்றுவதற்கு இடமளிக்கச் சொல்லுங்கள்“ என சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது..

Related posts: