பாவனையாளர் சட்டத்தை மீறிய வர்த்தகர்களுக்கு அபராதம்!

Wednesday, May 4th, 2016

பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையின் சட்டத்தை மீறி வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக கடந்த ஏப்ரல் மாதம் தொடரப்பட்ட 68 வழக்குகளுக்கு, அந்தந்தப் பிரதேச நீதிமன்றங்களால் 3 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் யாழ்.மாவட்ட இணைப்பதிகாரி தனசேகரம் வசந்தசேகரம், இன்று (04) தெரிவித்துள்ளார்.

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில், காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தமை, அதிக விலைக்கு விற்பனை செய்தமை மற்றும் பொருட்களின் விலைப் பட்டியல் காட்சிப்படுத்தாமை ஆகிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக வர்த்தக நிலையம் அமைந்துள்ள நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டன.

சிறப்புச் சந்தை, மருந்தகம், வெதுப்பகம், விடுதி, உணவகம், அழகுசாதனப் பொருட்கள் விற்பனையகம், சிகை அலங்கரிப்பு நிலையம் மற்றும் கட்டடப் பொருட்கள் விற்பனையகம் ஆகிய வர்த்தக நிலையங்கள் பிடிக்கப்பட்டன.

சாவகச்சேரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 03 வழக்குகளுக்கு 27 ஆயிரம் ரூபாயும், மல்லாகம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 15 வழக்குகளுக்கு 18 ஆயிரம் ரூபாயும், பருத்தித்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 9 வழக்குகளுக்கு 41 ஆயிரம் ரூபாயும், யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 41 வழக்குகளுக்கு 2 இலட்சத்து 84 ஆயிரம் ரூபாயும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: