ஜனாதிபதி ரணிலின் வீட்டுக்கு தீ வைப்பு – 205 மில்லியன் ரூபா நஷ்டம் என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவிப்பு!

Thursday, August 11th, 2022

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீடு எரிக்கப்பட்டதில் 205 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

வீட்டிற்கு தீ வைத்ததன் மூலம் 14 மில்லியன் ரூபாவும், ஜனாதிபதியின் மகிழுந்தை எரித்ததன் மூலம் 191 மில்லியன் ரூபாவும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளதென குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வீடு எரிப்பு சம்பவம் தொடர்பில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள 5 சந்தேகநபர்கள் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஜனாதிபதிக்குரிய உத்தியோகபூர்வ ஆசனத்தில் அமர்ந்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு பேரும் மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் 49, 55 வயதுடையவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.

மொரட்டுவைப் பிரதேசத்தில் இருவரும் இணைந்து வர்த்தக நிலையமொன்றை நடத்தி வருவதாகவும் பொலிஸர்ர் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூலை 09 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகை போராட்டக்காரர்களினால் கைப்பற்றப்பட்டதன் பின்னர் சமூக வலைத்தளங்களில் பரவிய புகைப்படங்களைக் கொண்டு இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி மாளிகையில் அத்துமீறி நுழைந்தமை, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படவுள்ளது.

கைது செய்யப்பட்ட பெண்கள் இரண்டு பேரும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: