பாதுகாப்பு செயலாளர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்த உத்தேசித்துள்ளதாக வெளியானது தகவல்!

Sunday, December 17th, 2023

பாதுகாப்பு செயலாளர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் ஜனவரி மாதம் இந்த மாற்றம் இடம்பெற உள்ளது. அதனடிப்படையில் புதிய பாதுகாப்புச் செயலாளராக முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவை நியமிக்க அரசாங்கம் ஆலோசனைகளை நடத்தியுள்ளது.

2019ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் தற்போதைய பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.

ஜெனரல் ஜகத் ஜயசூரிய 2009 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை இலங்கையின் 20ஆவது இராணுவத் தளபதியாக கடமையாற்றியிருந்தார்.

2009 ஆம் ஆண்டு நிறைவடைந்த இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றங்களில் ஈடுபட்டதாக தெரிவித்து, தென் அமெரிக்காவின் மனித உரிமைகள் அமைப்புகளால் கடந்த 2017ஆம் ஆண்டு ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

பிரேசில், கொலம்பியா ஆகிய நாடுகளிலும் இவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது. அத்தருணத்தில் அவர் பிரேசிலில் இலங்கையின் இராஜதந்திரியாக பணியாற்றியிருந்தார்.

ஜகத் ஜெயசூரிய பிரேசிலில் இருந்து வெளியேறி டுபாய் வழியாக இலங்கை வந்ததாக 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பரபரப்பான செய்திகளும் வெளியாகியிருந்தன.

எனினும் அப்போது இதனை மறுத்த வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேசினி கொலன்னே, தமது இரண்டு வருட பதவிக் காலம் நிறைவடைந்த நிலையிலேயே ஜெனரல் ஜகத் ஜெயசூரிய நாடு திரும்பியதாக அறிவித்திருந்தார்.

புலம்பெயர் தமிழர்களின் தேவைக்கு அமையவே, முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக போர்க்குற்ற வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தற்போதைய பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன கடந்த காலங்களில் தெரிவித்திருந்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

000

Related posts: