எரிந்த New Diamond கப்பலின் எண்ணெய் கசிவினால் கடலாமைகளுக்கு அச்சுறுத்தல் – நாரா நிறுவனம் அறிவிப்பு!

Tuesday, September 29th, 2020

New Diamond கப்பலில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டதால், கப்பல் காணப்பட்ட இடத்தை அண்மித்த பகுதியில் உள்ள கடலாமைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக நாரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த பகுதிகளிலுள்ள கடலாமைகளின் செயற்பாடுகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை தமது குழுவினர் அவதானித்துள்ளதாகவும் நாரா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

எண்ணெய்க் கசிவினால் கடலாமைகள் உள்ளிட்ட சில கடல்வாழ் உயிரினங்களுக்கு சிறியளவில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கப்பல் காணப்பட்ட கடற்பகுதியில் எண்ணெய் படலத்தின் தரச்சுட்டியும் அதிகரித்துள்ளதாக நாரா நிறுவனம் கூறியுள்ளது.

இதனால், கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் முழுமையான ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆய்வுகளின் அறிக்கையை எதிர்வரும் 2 வாரங்களுக்குள் சட்ட மா அதிபரிடம் கையளிக்க எதிர்பார்ப்பதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

குறித்த கப்பலை நாட்டின் கடல் எல்லையிலிருந்து நகர்த்தும் வரை, இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை கடல் பகுதியின் நிலை குறித்து ஆராயப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் பின்னர் மாதம் ஒரு தடவை குறித்த கடல் பிராந்தியம் ஆய்வுக்குட்படுத்தப்படும் என கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை கப்பல் காணப்படும் கடல் பகுதியிலுள்ள மீன்கள் உள்ளிட்ட உயிரினங்களின் செயற்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் அது குறித்து தங்களுக்கும் நாரா நிறுவனத்திற்கும் அறியப்படுத்துமாறு கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை, மீனவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

எவ்வாறாயினும் தீ பற்றிய கப்பலை நாட்டின் கடல் எல்லையிலிருந்து அப்புறப்படுத்துவதற்கு இதுவரை எவ்வித அனுமதியும் வழங்கப்படவில்லை.

இதேவேளை, இலங்கை கடற்பரப்பில் தீ பரவிய MT New Diamond கப்பலின் கெப்டனாக செயற்பட்ட ஹிரோஸ் ஹெலியாஸை விளக்கமறியலில் வைக்குமாறு சட்ட மா அதிபரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு பிரதம நீதவான் மொஹமட் மிஹார் நிராகரித்துள்ளார்.

மேலும், கெப்டன் ஹிரோஸ் ஹெலியாஸூக்கு நீதிமன்ற அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து கொழும்பு பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவை உடனடியாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்கள பணிப்பாளர் ஆகியோருக்கு அனுப்புமாறும் பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related posts: