அமெரிக்காவுக்கு விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி – அடுத்த வாரம் ஜேர்மன் செல்லவுள்ளதாகவும் தெரிவிப்பு!

Sunday, September 24th, 2023

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடு திரும்பியுள்ளார்.

துபாயில் இருந்து இலங்கை வந்த எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான இ.கே. 650 விமானம் மூலம் இன்று காலை 8.30 மணியளவில் அவர் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

ஜி 77 மற்றும் சீன அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக கடந்த 13 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கியூபாவின் ஹவானாவுக்கு சென்றிருந்தார்.

முன்பதாக கியூப விஜயத்தை நிறைவு செய்த பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் வருடாந்த அமர்வில் கலந்துகொள்வதற்காக கடந்த 17 ஆம் திகதி அமெரிக்காவின் நியூயோர்க் நகரை சென்றடைந்தார்.

இந்நிலையில் நாடு திரும்பியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளைய அமைச்சரவைக் கூட்டத்திற்கு தலைமை தாங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கைக்கு வருகைதந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை சந்தித்து, சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியில் இருந்து, இலங்கைக்கான இரண்டாவது தவணை பற்றிய கலந்துரையாடலையும் ஜனாதிபதி முன்னெடுக்கவுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பெர்லின் உலகளாவிய மாநாட்டில் பங்கேற்பதற்காக அடுத்த வாரம் ஜேர்மன் செல்லவுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மாநாட்டில் ஜனாதிபதி முதல் நாளில் உரையாற்றவுள்ளதுடன், ஜேர்மனியின் அரச தலைவர், பிற அரசியல் மற்றும் வணிகத் தலைவர்களுடனான சந்திப்புகளையும் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெர்லின் உலகளாவிய கலந்துரையாடல் என்பது தற்போதைய புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் ஒரு ஜேர்மன் உயர்மட்ட உலகளாவிய மாநாடாகும்.

ஜனாதிபதியின் இந்த ஜேர்மனிக்கான இரண்டு நாள் விஜயத்தில் பங்கேற்கவுள்ள, ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க, வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஆர்.எச்.எஸ். சமரதுங்க மற்றும் நிதியமைச்சின் ஆலோசகர் தேஷால் டி மெல் ஆகியோர் ஜேர்மன் அரசாங்க பிரதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

0000

Related posts: