பாடசாலை காணிகளில் பயிர்செய்கைக்கு அரசு நடவடிக்கை – தேசிய சபை உபகுழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க பரிந்துரை!

Wednesday, November 30th, 2022

நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு பாடசாலைகளில் பௌதீக வளங்களைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால வேலைத்திட்டங்களை அடையாளம் காணும் தேசிய சபை உபகுழுக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்

பாடசாலை மாணவர்களின் போசாக்கு மற்றும் போக்குவரத்து பிரச்சினைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்திக்காக பாடசாலைகளை பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆராய அதிபர்கள் மற்றும் ஆசிரியர் பிரதிநிதிகள், கல்வி அமைச்சு மற்றும் திறைசேரியின் பிரதிநிதிகள் இந்த உபகுழுவின் முன் அழைக்கப்பட்டனர்.

இதன்போது பாடசாலைகளுக்குச் சொந்தமான வெற்றுக் காணிகளில் பயிர்களை பயிரிடுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதால், கட்டிடங்கள் தவிர்ந்த நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்குச் சொந்தமான காணிகளை அளவீடு செய்து தகவல் வழங்குமாறு கல்வி அமைச்சுக்கு உபகுழு பரிந்துரைத்துள்ளது.

இது தவிர பாடசாலை கட்டிடங்களின் கூரைகளில் சூரிய மின் தகடுகளை பொருத்துவதன் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் எனவும் பாடசாலைகளில் மின்சார பாவனையை திறம்பட நிர்வகிப்பதற்கு மின்சக்தி முகாமையாளரை நியமிக்க வேண்டும் எனவும் குழுவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் மிகவும் பயனுள்ள மற்றும் வெளிப்படையான பொறிமுறையை தயாரிப்பதன் மூலம் பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்திற்கு வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் ஆதரவையும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: