பல்கலைக்கு அனுமதிக்கப்படும் மாணவர் விபரம் வெளியானது – புதிதாக நான்கு பீடங்களும் உருவாக்கம் – மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Monday, December 5th, 2022

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள வெட்டுப்புள்ளிகளின்படி இம்முறை 44,000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படவுள்ளதாக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்விடயத்தை தெரிவித்த அவர் இது தொடர்பில் மேலும் தெளிவுபடுத்துகையில்,

2021 ஆம் ஆண்டு 02 இலட்சத்து 83,616 பேர் உயர்தர பரீட்சைக்கு தோற்றினர். அவர்களில் ஒரு இலட்சத்து 71,497 பேர் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 91,115 பேர் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்தவர்களில் 43,927 பேர் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படவுள்ளனர்.

இவர்களில் உயிரியல் விஞ்ஞான பீடத்திற்கு 9,749 மாணவர்களும் , பௌதீக விஞ்ஞான பீடத்திற்கு 8,020 மாணவர்களும் , வணிக பீடத்திற்கு 7,701 மாணவர்களும் , கலை பீடத்திற்கு 11,314 மாணவர்களும் , பொறியியல் தொழிநுட்ப பீடத்திற்கு 2,236 மாணவர்களும், உயிர் அமைப்பு தொழில்நுட்ப தொழிநுட்ப பீடத்திற்கு 1,543 மாணவர்களும் , ஏனைய பீடங்களுக்கு 665 மாணவர்களும் உள்வாங்கப்படவுள்ளனர்.

இம்முறை நான்கு புதிய பீடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் தலா 50 மாணவர்கள் என 200 மாணவர்களை உள்வாங்க எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் நிதி பொருளாதார பீடம் மற்றும் புத்தாக்க இசை தொழிநுட்பம் மற்றும் தயாரிப்பு ஆகியவை புதிய பீடங்களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதே போன்று ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழி மற்றும் பயன்பாட்டு மொழியியல் பீடமும், வவுனியா பல்கலைக்கழகத்தில் வங்கி மற்றும் காப்புறுதி பீடமும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கணனி அறிவியல் , மென்பொருள் பொறியியல் மற்றும் தகவல் அமைப்புக்கள் ஆகிய பீடங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை ஏனைய சில பல்கலைக்கழகங்களில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: