பலாலி சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சரவை அனுமதிக்காக முன்வைக்கப்படும் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Thursday, August 27th, 2020

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்திய அரசாங்கத்துடன் கைச்சாத்தாகவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தம், அமைச்சரவை அனுமதிக்காக முன்வைக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சரவையில் முன்வைக்கப்படும் எனவும், அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கலந்துரையாடல், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிற்கும், அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கும் இடையில் அமைச்சில் ஏற்கனவே இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்தார்.

அமைச்சரவை அனுமதி கிடைத்தவுடன் இரு தரப்பினர்களுக்கு இடையில் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகும் என்பதோடு, அதனைத் தொடர்ந்து பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

முன்பதாக யாழ்ப்பாணம், பலாலி விமான நிலையம் இரண்டாவது உலக மகா யுத்தத்தின்போது, நிர்மாணிக்கப்பட்டது. அதன் பின்னர் உள்நாட்டு போக்குவரத்து விமான நிலையமாக இருந்துவந்த பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்திக்காக இந்திய அரசாங்கம் 300 மில்லியன் ரூபா நிதியை வழங்குவதற்கு இணங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: