தபால் மூல வாக்காளர்களுக்கு மேலும் இருநாள் சந்தர்ப்பம் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Wednesday, July 22nd, 2020

நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பினை பதிவுசெய்ய மேலும் இரண்டு தினங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே வழங்கப்பட்ட தினங்களில், தபால் வாக்குகளை பதியசெய்ய முடியாமல் போனவர்கள் எதிர்வரும் 24 & 25 ஆகிய தினங்களில் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அதன்படி, 24 ஆம் திகதி காலை 8.30 மணிமுதல் பிற்பகல் 4.00 மணி வரையும் 25 ஆம் திகதி காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரையும் வாக்குகளை பதிவு செய்ய முடியும் என்றுமு; அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு பணிகளானது கடந்த 13 ஆம் திகதி ஆரம்பமாகி, 14, 15, 16 மற்றும் 17 ஆகிய தினங்களில் இடம்பெற்றிருந்தது.

எனினும் குறித்த தினத்தில் வாக்கினை பதிவுசெய்ய தவறவிட்ட அதிகாரிகளின் நலன் கருதி நேற்று 21 ஆம்திகதி மற்றும் இன்றும் 22 ஆம் திகதிகளில் வாக்கினை பதிவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்த நிலையில் மேலும் இரண்டு தினங்கள் நீடிக்கப்பட்டுள்ளது.

இம்முறை பொதுத் தேர்தலுக்கு தபால் மூலம் வாக்களிப்பற்காக நேற்றுவரையில் வழங்கப்பட்டிருந்த காலத்தில் கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் வாக்களிப்பு வீதம் குறைந்து காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்காரணமாக தபால் மூலம் வாக்களிக்க மேலதிகமாக இரண்டு நாட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை கொரோனா அச்சம் காரணமாக அநுராதபுரம், ராஜாங்கனை பிரதேச செயலர் பிரிவில் தபால் மூல வாக்களிப்பு மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இம்முறை நாடாளுமன்ற தேர்தலுக்கு மொத்தமாக 705,085 தபால் மூல வாக்காளர்கள் வாக்கினை அளிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: