பற்றுச்சீட்டு விநியோகத்திலிருந்து விலகும் புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் – சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர தெரிவிப்பு!

Thursday, December 23rd, 2021

பொதிகள் போக்குவரத்தில் ஈடுபடும் புகையிரதங்களை இரத்து செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதிகளை பொறுப்பேற்கும் நடவடிக்கையில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்து புகையிரதங்களை தற்காலிகமாக இடைநிறுத்த இலங்கை புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த தீர்மானம் தொடர்பில் புகையிரத நிலையங்களுக்கு அறிவிக்கப்படாதமையால் அதிகளவிலான பொதிகள் குவிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தீர்மானம் தொடர்பில் இலங்கை புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு அறிவிக்கப்படாமையினால் சேவை பெறுனர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன், பொதிகள் போக்குவரத்தில் ஈடுபடும் புகையிரதங்களை இரத்து செய்தமை தொடர்பில் எவ்வித மாற்று நடவடிக்கைகளும் திணைக்களத்தினால் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதிகளை பொறுப்பேற்கும் நடவடிக்கையில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாதுகாப்பற்ற புகையிரத பெட்டிகளை போக்குவரத்தில் இணைத்துக்கொண்டமை, இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள புகையிரத பெட்டிகளை போக்குவரத்தில் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (23) நள்ளிரவுமுதல் பற்றுச்சீட்டுக்களை விநியோகிக்கும் நடவடிக்கையில் இருந்து விலகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசன முன்பதிவு தவிர்ந்த, ஏனைய புகையிரத பயணங்களுக்கு பற்றுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் மற்றும் போக்குவரத்து அமைச்சுடன் முன்னெடுத்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்..

எனவே, எதிர்வரும் 26 ஆம் திகதிமுதல் நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் இலங்கை புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: