பயணத் தடையை தளர்த்த வேண்டாம் – ஜனாதிபதியிடம் இலங்கை மருத்துவ சங்கம் கோரிக்கை!

Sunday, June 20th, 2021

பயணத்தடை கட்டுப்பாடுகளை நாளையதினம் 21 ஆம் திகதி நீக்கவேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இலங்கை மருத்துவ சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்து கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் மிகவும் முக்கியமான இந்த தருணத்தில் பயணத்தடை கட்டுப்பாடுகளை தொடருமாறு நாங்கள் ஆழ்ந்த கரிசனையுடன் வேண்டுகோள் விடுக்கின்றோம் எனவும் மருத்துவ சங்கம் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

சில நாட்களிற்கு பயணத்தடை கட்டுப்பாடுகளை நீக்குவது கூட ஏப்பிரல் மாதத்தில் காணப்பட்ட நிலைமையை நோக்கி நாட்டை இட்டுச்செல்லும் என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் கடந்த மூன்று வாரங்களாக காணப்பட்ட போக்குவரத்து கட்டுப்பாடுகளால் கிடைத்த பலாபலன்களை இழக்கவேண்டிய நிலையேற்படும் எனவும் இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தற்போது நாடு முழுவதும் அமுலில் இருக்கும் பயணக்கட்டுப்பாடு நாளை அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் 23 ஆம் திகதி இரவு 10 மணி முதல் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் மீண்டும் பயணத்தடை அமுலாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பயணத்தடை தளர்த்தப்படும் போதும் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடானது தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனவும் மக்கள் ஒன்று கூடல்கள், பொது நிகழ்வுகள் உள்ளிட்டவற்றிற்கான தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்று இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: