பங்களாதேஷிடமிருந்து பெறப்பட்ட கடனை முழுமையாக செலுத்தியுள்ளது இலங்கை – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!.

Sunday, September 24th, 2023

இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் பங்களாதேஷிடமிருந்து பெறப்பட்ட 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனின் இறுதி தவணையாக இலங்கை 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷிடமிருந்து 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்த 200 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கை கடனான பெற்றிருந்தது.

இலங்கை, கடந்த வருடம் பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்திருந்த நிலையில், தமது அனைத்து வெளிநாட்டு கடன் செலுத்துகைகளையும் ஒத்திவைத்திருந்தது.

இந்தநிலையில், குறித்த கடன் தொகையில் கடந்த ஒகஸ்ட் 17 ஆம் திகதி 50 மில்லியன் அமெரிக்க டொலரையும், கடந்த 2 ஆம் திகதி 100 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் இலங்கை திருப்பிச் செலுத்தியது.

அத்துடன், குறித்த கடனின் இறுதி தவணையாக 50 மில்லியன் அமெரிக்க டொலரை கடந்த 21 ஆம் திகதி இலங்கை செலுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

இந்த கடன் தொகைக்கு வட்டியாக 4.5 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் இலங்கை செலுத்தியுள்ளது.

இந்தநிலையில், பங்களாதேஷிடமிருந்து பெற்றுக்கொண்ட 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடன், தற்போது வட்டியுடன் செலுத்தி முடிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

தற்போது, முதலில் ஒப்புக்கொள்ளப்பட்ட திகதியை விட ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள நிலையில் இந்த கடன் செலுத்தி முடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: