பகிடிவதை செய்தால் 10 வருட சிறை : உயர் கல்வி அமைச்சு அதிரடித் தீர்மானம்!

Sunday, August 19th, 2018

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் பகிடிவதைகளுக்கு தேவையான நடவடிக்கைகளை பொலிஸ் நிலையங்கள் மூலம் மேற்கொள்வதற்கு பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் பகிடிவதைக்கு எதிராக 1998ஆம் ஆண்டு இலக்கம் 20இன் கீழான பகிடிவதை தடை சட்டத்தின் கடுமையான தண்டனை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைவாக பொலிஸ் மா அதிபர் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் இது தொடர்பான ஆலோசனையை வழங்கியுள்ளார்.
பகிடிவதை சட்டத்தின் சரத்திற்கு அமைவாக குற்றச் செயல் சட்டத்தின் கீழ் பகிடிவதையை மேற்கொள்வோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் என்று உயர்கல்வி மற்றும் கலாச்சார அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
பகிடிவதை சட்டத்திற்கு அமைவாக குற்றமிழைத்தவராக காணப்படும் ஒருவருக்கு நீதிமன்றத்தின் மூலம் கடும் வேலையுடன் கூடிய 10 வருட காலம் வரையிலான சிறை தண்டனையை விதிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வருட கல்வி ஆண்டு காலப்பகுதியில் பல்கலைக்கழக அனுமதிக்காக பதிவு செய்யப்பட்டிருந்த மாணவர்களுள் 1989 பேர் பகிடிவதையின் காரணமாக பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேறியுள்ளனர் எனவும், இதுவரையில் 14 மாணவர்கள் பகிடிவதையின் காரணமாக உயிரிழந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
பகிடிவதை தொடர்பான முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கான விசேட முறைப்பாட்டு பிரிவொன்று மானிய குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என பல்கலைக்கழக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா தெரிவித்துள்ளார்.
இது வரையில் 417 முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாகவும் இம்முறை பல்கலைக்கழகங்களில் உள்வாங்கும் மாணவர்களுக்கு அனுப்பப்படும் விண்ணப்பங்களுடன் பகிடிவதை குறித்து பெற்றோருக்கு தெளிவுபடுத்தும் கடிதம் ஒன்று அனுப்புவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related posts: