நொதேர்ன்பவர் வழக்கை விசாரணைக்கு எடுக்குமாறு கோரிக்கை!

Thursday, November 23rd, 2017

சுன்னாகம் உள்ளிட்ட பிரதேசங்களில் நிலத்தடி நீருடன் கழிவு ஓயில் கலந்த வழக்கை மீள விசாரணைக்கு எடுக்குமாறு நொதேர்ன்பவர் நிறுவனத்தினர் கோரியுள்ளனர்.

இந்த வழக்கு மல்லாகம் நீதிமன்றில் பதில் நீதிவான் முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. நொதேர்ன்பவர் நிறுவனம் சார்பில் நீதிமன்றில் முற்பட்ட சட்டத்தரணி இது பற்றிய கோரிக்கையை மன்றில் முன்வைத்தார்.

இந்த வழக்கை மல்லாகம் நீதிமன்றில் விசாரணை நடத்தி தீர்க்குமாறு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. அதனால் வழக்கு விசாரணையை ஆரம்பிக்கவேண்டும் என்று சட்டத்தரணி கோரினார். அது பற்றிய மேன்முறையீட்டு நீதிமன்றின் கட்டளையின் பிரதி ஒன்றையும் அவர் மன்றில் சமர்ப்பித்தார்.

எனினும் கட்டளை பற்றிய உண்மைப் பிரதி மேன்முறையீட்டு நீதிமன்றிலிருந்து மல்லாகம் நீதிமன்றுக்கு இன்னும் கிடைக்கவில்லை. அது பற்றிய முன்மொழிவு ஒன்றை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் முன்வையுங்கள் என்று பதில் நீதிவான் ந.தம்பித்துரை அறிவித்து வழக்கை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

மல்லாகம் நீதிமன்றில் இந்த வழக்கு கடந்த வருடம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது நொதேர்ன்பவர் நிறுவனத்தை மூடுமாறு மல்லாகம் நீதிமன்று உத்தரவிட்டிருந்தது. அந்தத் தீர்ப்புக்கு எதிராக யாழ்ப்பாண மேல்நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்பட்டது. எனினும் நிறுவனம் இயங்க அனுமதி வழங்கப்படவில்லை. பின்னர் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் முறையீடு செய்யப்பட்டது.

Related posts: