ஆசையும், பேராசையும் இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும் – இந்திய துணைத்தூதுவர் நடாராஜன்!

Monday, July 31st, 2017

இந்தியா பொருளாதார அபிவிருத்தியில் மிக உச்சத்தில் இருந்தாலும், போதாது என இன்றும் நினைத்துக்கொள்கின்றது. ஆசையும், பேராசையும் இருந்தால் மாத்திரமே வாழ்க்கையில் முன்னேற முடியும் என இலங்கைக்கான இந்திய துணைத்தூதுவர் ஆ.நடாராஜன் தெரிவித்தார்.

இந்தியாவில் பிளாஸ்ரிக் மற்றும் றபர் தொழிலதிபர் சுவாமிநாதனின் யாழ்ப்பாணம் விஜயம் மற்றும் கொழும்பு பி.எம்.ஐ.சி.எச் எதிர்வரும் 3 ஆம் திகதி முதல் 05 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள பிளாஸ்ரிக் மற்றும் றபர் கண்காட்சி தொடர்பான கலந்துரையாடல் யாழ்.கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் நேற்று (30.07) நடைபெற்றது

யாழ்.மாவட்டத்தில் உள்ள வர்த்தகர்களும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர். இந்த கலந்துரையாடலில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்திய இலங்கை உறவு எப்போதும் மேலோங்கி வளர வேண்டும். இந்தியா பெரிய நாடாக இருக்கலாம். இந்தியாவின் பொருளாதார அபிவிருத்தி மிக வேகத்தில் இருக்கின்றது. ஆசையும்,பேராசையும் இருக்க வேண்டும். அப்போது தான் வாழ்க்கையில் முன்னேற முடியும்.   நாடு முன்னேற முடியும். எவ்வளவு தான் வேகமான பொருளாதார அபிவிருத்தி இருந்தாலும், இன்றும் கூட பல விடயங்களில் போதாது என உணர்கின்றோம். கல்வியை எடுத்துக்கொண்டால் பல்லாயிரக்கணக்கான பாடசாலைகள் உள்ளன. ஆயிரக்கணக்கான கல்லூரிகளும், ஆயிரக்கணக்கான பல்கலைக்கழகங்களும் உள்ளன. ஆனால், பெற்றோர்கள் தமது பிள்ளைக்கு இடம் கிடைக்கவில்லை என குறைகூறிக்கொண்டே இருக்கின்றார்கள்.

எவ்வளவு தான் அபிவிருத்தி இருந்தும் கூட போதாது என்றே நினைக்கின்றோம். எமது பக்கத்து வீட்டுக்காரர் நல்லா இருந்தால் தான் நானும் நல்லா இருக்க முடியும். அந்தவகையில், இந்தியாவும் அப்படித்தான் உணர்கின்றது.

இந்தியாவின் அண்டை நாடுகள் மற்றும் நட்பு நாடுகள் அனைத்து துறைகளிலும், பொருளாதாரத்திலும் அபிவிருத்தி அடைய வேண்டும். அந்த வளர்ச்சிக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். தெற்காசிய கண்டத்தில் எமது நாடுகள் வளமான நாடுகளாக உருவாக வேண்டுமாயின், முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். “முயற்சி திருவினையாக்கும்” எமது முயற்சிகள் தவறலாம். முயற்சிக்க தவறக்கூடாது என்றார்.

Related posts: