நெடுந்தீவில் கால்நடை மருந்தகம் இல்லை – கால்நடை உரிமையாளர்கள்!

Friday, November 24th, 2017

நெடுந்தீவுப் பகுதியில் 4 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட மாடுகளும் 2 ஆயிரம் ஆடுகளும் உள்ள நிலையிலும் அங்கு ஒரு கால்நடை மருந்தகம் கூட இல்லாமை பெரும் பிரச்சினையாகவுள்ளது. நெடுந்தீவில் கால்நடை மருந்தகம் ஒன்று திறக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடப்பட்டு மூன்று மாதம் கடந்தும் எந்தப்பயனும் இல்லை என கால்நடை உரிமையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;

கால்நடைகளுக்கு சுகவீனம் என்று இனங்காணப்பட்டாலும் அதற்கான மருந்துகளை யாழ்ப்பாணம் சென்று கொள்வனவு செய்து திரும்பி அதன் பிற்பாடு வைத்தியம் செய்வதற்கிடையில் கால்நடைகள் இறக்கின்றன.

அதிக கால்நடைகளின் இறப்பிற்கு காரணமாகவும் அமைகின்றது. எனவே நெடுந்தீவில் கால்நடை மருந்தகம் ஆரம்பிப்பதே பொருத்தமானது என கால்நடை மருத்துவர் கடந்த ஓகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி நெடுந்தீவுப் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.

எனினும் அந்தக் கோரிக்கை தொடர்பில் இன்று வரை எந்த விதமான முன்னேற்றமும் இல்லை. இது தொடர்பில் உரிய அதிகாரிகள் ஆவன செய்ய முன் வர வேண்டும் என கோரிக்கை முன்வைக்கின்றனர்.

இது தொடர்பில் வடக்கு மாகாண விவசாய கால்நடை அமைச்சின் செலாளர் எஸ்.சத்தியசீலனைத்  வடக்கு மாகாணத்தில் கால்நடை மருந்தகங்கள் கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கங்களின் ஊடாகவே நடத்தப்படுகின்றன. நெடுந்தீவில் கால்நடை கூட்டுறவுச் சங்கம் சீரமைப்புச் செய்யப்படவில்லை.

இதனால் குறித்த சங்கத்தை சீரமைத்து மருந்தகத்தையும் அமைக்கும் முயற்சி திணைக்களம் ஊடாக இடம்பெறுகின்றது. இதற்காக பணிப்பாளர் கூட்டுறவுத் திணைக்களம் உள்ளிட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இதன் பிரகாரம் புதிய ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து நெடுந்தீவிலும் கால்நடை மருந்தகம் ஒன்று ஆரம்பிக்கப்படும் என்றார்.

Related posts: