நீதிமன்றத்தின் உத்தரவுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – இளஞ்செழியன்!

Wednesday, September 28th, 2016

மட்டக்களப்பு மண்டூர் முருகன் ஆலய நிர்வாகச் செயற்பாடுகள் சம்பந்தமான வழக்கு விசாரணைக்கு பிரதம நீதியரசரினால் நியமனம் செய்யப்பட்டுள்ள யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், இந்த ஆலயத்தின் கணக்கு வழக்குகள், நிர்வாகம் என்பவற்றுக்குப் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பிரதேச செயலாளருக்கு ஆலயம் சார்ந்தோர் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

இந்த வழக்கு கடந்த தவணை மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி சந்திரமணி மற்றும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில்நடைபெற்று, அடுத்த தவணைக்காக செவ்வாய்க்கிழமைக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து செவ்வாய்க்கிழமை இந்த வழக்கு நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது மன்றில் ஆலயத் தரப்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி, ஆலயத்தின் கணக்கு வழக்கு மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக பிரதேச செயலாளர் மாவட்ட நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்டு கட்டளைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் இந்த மேன்முறையீட்டு வழக்கைத் தொடர்ந்து நடத்துவது அவசியமா என்பது குறித்த விண்ணப்பத்தை அடுத்த தவணையில் முன்வைக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

இதனையடுத்து, நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த ஆலயச் செயற்பாடுகளுக்குப் பொறுப்பானவர்களை நோக்கி, நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு முறையாக நடந்து கொள்ள வேண்டும். ஆலயம் சார்ந்தோர் நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பதிகாரியாகிய பிரதேச செயலாளருக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

அத்துடன், மண்டூர் முருகன் ஆலயத்தின் அசையும் சொத்துக்கள், அசையா சொத்துக்கள், ஆதனங்கள், வயல்கள், குத்தகைக்கு விடப்பட்டுள்ள வயல்களின் வருமானங்கள் உள்ளிட்ட அனைத்து விடயங்களுக்கும் நிர்வாகச் செயற்பாடுகளுக்கும் ஆலயம் சார்ந்தவர்கள் நிர்வாகத்திற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள பிரதேச செயலாளருக்கு ஒத்துழைத்து செயற்பட வேண்டும் என நீதிபதி சுட்டிக்காட்டினார்.

நிர்வாகத்தினரால் கைவிடப்பட்டதும், கைவிடப்படும் நிலையில் உள்ளதுமான அனைத்து ஆலயங்களுக்கும் மாவட்ட நீதிபதியே சட்டத்தின் மேலான தந்தையாவார் என்பதைத் தெரிந்து உணர்ந்து கொள்ள வேண்டும் என நீதிபதி இளஞ்செழியன் விளக்கமளித்து வழக்கை நவம்பர் மாதம் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

ilancheliyan-j_06072016_kaa_cmy

Related posts: