நீதிபதி. சரவணராஜா விவகாரம் – இரண்டு வாரங்களுக்கு எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்கும் யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம்!

Tuesday, October 3rd, 2023

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ. சரவணராஜா விவகாரம் தொடர்பில், யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் தொடர்சியாக இரண்டு வாரங்களுக்கு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு நேற்றையதினம் கூடிய போது, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவுக்கு ஆதரவு தெரிவித்தும், நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தி சட்டவாட்சியை நிலைநாட்டவும் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கத்தால் எடுக்கப்பட்ட பணிப்பகிஸ்கரிப்பில் இன்றைய தினம் இணைவதற்கும் யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அவர்கள் முல்லைத்தீவு சென்று நீதிமன்றத்தின் முன்னால் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.

நீ துறைக்கு ஏற்பட்ட இந்த அச்சுறுத்தலை கண்டித்து அடுத்து வரும் இரண்டு வாரங்கள் கறுப்பு நிறத்திலான முகக்கவசங்களை அணிந்து கடமையில் ஈடுபடவும் தீர்மானித்துள்ளனர்.

இன்றும், நாளையும் சட்டத்தரணிகள் வடமாகாண நீதிமன்ற நடவடிக்கைகளை பகிஷ்கரிப்பதுடன், இது தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கை தொடர்பில் எதிர்வரும் 4ம் திகதி தீர்மானிக்கவுள்ளனர்.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினர் நேற்றுமுதல் காலவரையறையின்றி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகலுக்கான காரணம் கண்டறியப்படும் வரையில் முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் தொடர் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நீதிமன்ற வழக்குகளில் முன்னிலையாகாது தொடர்ந்தும் நீதிமன்ற செயற்பாடுகளை புறக்கணிக்கவுள்ளதாக முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பரஞ்சோதி குறிப்பிட்டுள்ளார்.

000

Related posts: