நிரந்தர நியமனத்தை வலியுறுத்தி மூன்றாவது  நாளாகவும் போராடும் யாழ். மாநகர சபை ஊழியர்கள்!

Thursday, May 12th, 2016

யாழ்ப்பாணம் மாநகர சபையில் தற்காலிக இணைப்பில் கடமையாற்றும் சுகாதார தொழிலாளர்கள் மற்றும் குடும்பநல உத்தியோகத்தர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மேற்கொண்டுள்ள போராட்டம் மூன்றாவது நாளாகவும் இன்று தொடர்ந்து நடைபெற்றுவருகின்றது.

சுமார் 120 சுகாதார தொழிலாளர்களும் 8 குடும்பநல உத்தியோகத்தர்களும் நல்லூரில் அமைந்துள்ள யாழ். மாநகர சபைக்கு முன்பாக கடந்த செவ்வாய்க்கிழமை (10) முதல் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் சுகாதார தொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கையில் – ‘கடந்த 7 வருடங்களாக தற்காலிக ஊழியர்களாக கடமையாற்றும் தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு பல தடவைகள் கோரிக்கை விடுத்தபோது, எங்கள் அனைவருக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என மாநகர ஆணையாளர் பொ.வாகீசன் கூறினார்.

ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர், எங்களில் 5 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது. ஆணையாளரிடம் சென்ற அனைவருக்கும் நியமனம் வழங்குமாறு கோரினோம்.

குறித்த ஐந்து பேருக்குமான நிரந்தர நியமனத்தை நிறுத்தி, அனைவருக்கும் சேர்த்து நியமனம் வழங்குவதாக ஆணையாளர் அப்போது கூறினார். ஆனால், கடந்த 10ஆம் திகதி எங்களுக்கு சம்பளம் வழங்கப்படும் போது, அந்தப் பட்டியலில் ஐவரின் பெயர்கள் இருக்கவில்லை. இதன்மூலம் ஆணையாளர் எங்களை ஏமாற்றி ஐந்து பேருக்கு மாத்திரம் நிரந்தர நியமனம் வழங்கியமை தெரியவந்தது என்றனர்.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குடும்பநல உத்தியோகத்தர்கள் கருத்து கூறுகையில்து ‘எங்களில் சிலர் 19 வருடங்களாக தற்காலிக இணைப்பில் கடமையாற்றி வருகின்றனர். நாங்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கடமையாற்றி வருகின்றோம். எனினும் இதுவரையில் எங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை’ என்றனர்.

2

1

3

Related posts: