நிதி கையாடல் தொடர்பில் விவசாயிகள் முறைப்பாடு – ஒரு வாரத்திற்குள் கணக்காய்வுக்கு உட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை என கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் தேவரதன் தெரிவிப்பு!

Monday, January 3rd, 2022

கிளிநொச்சி D – 7 பெரிய பரந்தன் கமக்கார அமைப்பினுடைய நிதி முறைகேடுகள் தொடர்பில் விவசாயிகளால் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பாக ஒரு வார காலத்துக்குள் கணக்காய்வுக்கு உட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதாக கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் தேவரதன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழ் உள்ள D – 7 பெரிய பரந்தன் கமக்கார அமைப்பின் பொருளாளரால் சுமார் ஒரு கோடியே 3 லட்சத்து 60 ஆயிரத்து 240 ரூபாய் நிதி எந்த வித அனுமதியும் இன்றி செலவிடப்பட்டுள்ளதாகவும் சுமார் நான்கு வருடங்களாக கணக்காய்வுகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்றும் குறித்த அமைப்பினால் பெருந்தொகை நிதி மோசடி செய்யப்பட்டதாகவும் பிரதேச விவசாயிகளால் கடந்த 28 ஆம் திகதி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது..

கடந்த 2018 ஆம் ஆண்டு தொடக்கம் 2020 ஆம் ஆண்டு வரையான நான்கு ஆண்டுகளிலும் குறித்த அமைப்பினுடைய நீதி முறையற்ற விதத்தில் செலவிடப்பட்டுள்ளது என்றும் குறிப்பாக உத்தியோகத்தர் மற்றும் உரிய அதிகாரிகளின் அனுமதியின்றி செலவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக நன்கொடை என்ற பெயரில் 2018ஆம் ஆண்டு 22 ஆயிரம் ரூபாவும் 2019 ஆம் ஆண்டிலேயே 53 ஆயிரம் ரூபாவும் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இந்த நன்கொடை நிதி யாருக்கு யாருடைய அனுமதியில் வழங்கியது என்பது கூட தெரிவிக்கப்படவில்லை. இவ்வாறு பெருந்தொகை நிதி முறையற்ற விதத்தில் கையாளப்பட்டிருப்பதாகவும் விவசாயிகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த நான்கு வருடங்களுக்கான கணக்கறிக்கைகள் எதிலும் எந்த கையொப்பங்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான விடயங்களை சுட்டிக்காட்டிய போதும் மேற்படி அமைப்பினுடைய கணக்கு விவரங்களை திணைக்களம் சார்ந்த சில உயர் அதிகாரிகள் இதனை மூடி மறைக்க முற்படுவதாகவும் விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

விவசாயிகளின் கோரிக்கையை அடுத்து பதிலளித்த மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் குறித்த அமைப்பினுடைய கணக்கறிக்கை தொடர்பில் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு ஒரு வார காலத்துக்குள் அறிக்கை சமர்பிப்பதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: