நாட்டை முழுமையாக மூட முடியாது – மீண்டும் திட்டவட்டமாக கூறுகின்றார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச!

Tuesday, November 10th, 2020

நோய்த்தொற்று உலகிலிருந்து ஒழிக்கப்படும் வரை நாட்டை மூடி வைக்க முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் தினமும் இடம்பெறும் கொரோனா ஒழிப்பு விசேட செயலணி நேற்று திங்கட்கிழமை கூடியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று ஒரு சுகாதார பிரச்சினையாகும். அதிலிருந்து மக்களை பாதுகாத்து நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வது சுகாதார சேவையினதும் அரசாங்கத்தினதும் பொறுப்பாகும் எனவும் தெரிவித்தார்.

அத்தோடு, உலகின் உயர்தரம் வாய்ந்த அறிவைக்கொண்டுள்ள எமது நாட்டின் வைத்தியர்களுக்கும் சுகாதாரத் துறையினருக்கும் அதனை செய்ய முடியும் என்று தான் உறுதியாக நம்புவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நோய்த் தொற்றுக்கு மத்தியில் எமக்கு மேற்கொள்ள முடியுமான மாற்று வழிகள் 03 உள்ளன. ஒன்று ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்து முழு நாட்டையும் முடக்குவது. இரண்டாவது எதனையும் செய்யாதிருப்பது, மூன்றாவது நோயை கட்டுப்படுத்தும் அதே நேரம் நாட்டை வழமை போன்று பேணிச் செல்வதாகும். நாம் மூன்றாவது மாற்றுவழியை தெரிவுசெய்திருக்கின்றோம் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும் கொவிட் நோயாளிகளை இனங்கண்டு உரிய சிகிச்சையை வழங்கி முதற் கட்டத்திலேயே குணப்படுத்த மருத்துவர்களுக்கும் பணிக்குழாமினருக்கும் முடியுமாக உள்ளது.

எனவே தீவிர சிகிச்சை சேவைகள் தேவையில்லை. நோய் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கும் தொற்றுக்குள்ளாவதை தவிர்ந்திருப்பதற்கும் மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அதற்காக பின்பற்றப்பட வேண்டிய சுகாதார வழிகாட்டல்களை மருத்துவர்களின் ஊடாக மக்களிடம் கொண்டு செல்வது ஊடகத் துறையின் முக்கிய பொறுப்பும் கடமையுமாகும் என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: