நாட்டை முழுமையாக மூடுவதற்குப் பதிலாக தொற்று அதிகமாக உள்ள இடங்களை மாத்திரம் முடக்குவதே சிறந்தது – ஜனாதிபதி தெரிவிப்பு!

Wednesday, October 28th, 2020

நாட்டில் கொரோனா பரவல் காரணமாக இதுவரை 35 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் நாட்டை மீண்டும் முழுமையாக முடக்குவது போன்ற எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா பரவும் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், சமூகத்தில் தொற்று நோய் விரைவாகப் பரவுவதால் பொது மக்கள் தீர்க்கமான காலகட்டத்தில் சென்று கொண்டிருக்கிறார்கள் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தினமும் சராசரியாக 300 க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றனர். கொழும்பு நகரை அண்மித்த மொரட்டுவ பகுதியில் நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையை அடுத்து 42 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பேலியகொடை மீன் சந்கையில் இனங்காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை இனங்கண்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போதே இவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த பரிசோதனையின் பின்னரே மொரட்டுவ பகுதிக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளதுடன் பொரளையில் 20 பேருக்கும், கொட்டாஞ்சேனையில் 44 பேருக்கும், மட்டக்குளியில் 36 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது நாடு முழுவதிலும் கொரோனா நோய்தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 19ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நாட்டை முழுமையாக முடக்குவதற்கான எந்த தீர்மானமும் எடுக்கப்போவதில்லை என்று அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை சந்திப்பின்போது இந்த தீர்மானத்தை கோட்டாபய ராஜபக்ச தெரிவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவையின் கூட்டம் நேற்றுமுன்தினம் ஜனாதிபதி செயலகத்தில் அரச தலைவர் கோட்டாபய தலைமையில் நடைபெற்றிருந்தது.

இதன்போது கொரோனா தொற்றின் அதிவேக அச்சுறுத்தல் குறித்து நீண்டநேரம் பேசப்பட்டிருக்கிறது. நாட்டை முழுமையாக முடக்குவது பற்றி அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதியிடம் வினவிய போது நாட்டை முழுமையாக மூடுவதற்குப் பதிலாக தொற்று அதிகமாக உள்ள இடங்களை மாத்திரம் அடையாளங் கண்டு முடக்குவதே தற்போதைய தீர்மானம் என்பதையும் ஜனாதிபதி அமைச்சரவையில் தெளிவுபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: