அலரி மாளிகையை விட்டு வெளியேறினார் ரணில்!

Thursday, November 21st, 2019

ரணில் விக்ரமசிங்க தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில், உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகையிலிருந்து வெளியேறியுள்ளார்.

அத்துடன் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில் அக் கடிதம் ஜனாதிபதிக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

அண்மையில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றிருந்த நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்று, ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ளார்.

இதனையடுத்து, தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொண்டு, புதிய ஜனாநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச கட்சி பிரதி தலைவர் பதவியினை இராஜினாமா செய்திருந்தார்.

அத்துடன், மக்களின் ஆணையை ஏற்று அரசாங்கத்தில் இருந்த பலரும் பதவியை இராஜினாமா செய்திருந்தனர். இந்நிலையில், பிரதமர் பதவியினை ரணில் விக்ரமசிங்க இராஜினாமா செய்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்கும் நோக்கில், ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

இந்நிலையில், இடைக்கால அரசாங்கத்தின் புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று பதவியேற்கவுள்ளார்.

இவ்வாறான பின்னணியில் பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகையிலிருந்து ரணில் விக்ரமசிங்க இன்று வெளியேறியுள்ளார்.

Related posts: