நாட்டில் HIV நோயாளர் தொகையில் திடீர் அதிகரிப்பு – கடந்த 9 மாத காலத்தில் 342 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக விசேட மருத்துவ நிபுணர் ரசாஞ்சலி ஹெட்டியாரச்சி எச்சரிக்கை!

Wednesday, October 26th, 2022

நாட்டில் 18 வயதுக்கும் 30 வயதுக்குமிடைப்பட்ட இளைஞர் யுவதிகளிடையே எச்ஐவி வைரஸ் தொற்று அதிகரித்து வருவதாகவும் கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் அந்த எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதாகவும் தேசிய பாலுறவு நோய் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் ரசாஞ்சலி ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தின் ஆரம்பத்திலிருந்து இதுவரைக்குமான 09 மாத காலத்தில் 342 எச்ஐவி தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர்களுள் 50 பல்கலைக்கழக மாணவர்கள், 04 பாடசாலை மாணவர்கள், மத குரு ஒருவரும் உள்ளடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

முன்பதாக 1987 ஆம் ஆண்டு நாட்டில் முதலாவது நோயாளர் பதிவாகியுள்ளதுடன் இதுவரை பதிவுசெய்யப்பட்டுள்ள எச்ஐவி நோயாளர்களில் 20 பிக்குகளும் 02 பிற மத குருமாரும் உள்ளடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

1987 ஆம் ஆண்டுமுதல் இதுவரை 4,404 எச்ஐவி தொற்றாளர்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் 1,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 2,300 பேர் தற்போது சிகிச்சைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மதிப்பீட்டின்படி எச்ஐவி தொற்றாளர்கள் 3,700 பேர் சிகிச்சைபெற்றுள்ளனர் என்றும் 1,500 எச்ஐவி தொற்றாளர்கள் தாம் எச்ஐவி தொற்றுநோயாளர்கள் என்பது தெரியாமலே சமூகத்தில் வாழ்ந்து வருவதாகவும் பாதுகாப்பற்ற உடலுறவில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் பெரும்பாலானோருக்கு அவர்களிடமிருந்து எச்ஐவி தொற்றும் அபாயமுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பற்ற உடலுறவு காரணமாக இவ்வாறான நோய்த் தொற்று உருவாவதாகவும் பெற்றோர்கள் பிள்ளைகளுடன் இதுதொடர்பில் திறந்த மனதுடன் கலந்துரையாடுவது இத்தகைய தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வழிவகுக்குமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, வீட்டிலுள்ள பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர் அதிகளவு கவனம் செலுத்துவது சிறந்ததென்றும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: