நாட்டில் 7 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா மரணங்கள் – வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோரது எண்ணிக்கையும் 50 ஆயிரத்தை கடந்தது!

Thursday, August 26th, 2021

நாட்டில் மேலும் 198 பேர் கொரோனாத் தொற்றால் மரணித்தனர் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் இறுதியாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 7 ஆயிரத்து 948 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் இறுதியாக  உயிரிழந்த 198 பேரில் 119 ஆணகளும் 79 பெண்களும் அடங்குகின்றனர் என்றும் அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்களுள் 30 வயதுக்குக் குறைவான ஆண் ஒருவரும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேநேரம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக காணப்படுவதாக குறித்த மாவட்டத்தின் கொரோனா ஒழிப்பு செயலணி குறிப்பிட்டுள்ளது.

நேற்றையதினம் வெளியான அன்ரிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனை பெறுபேறுகளின்படி 239 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை மொத்தமாக 10 ஆயிரத்து 725 நபர்களுக்கு இற்றைவரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த காலத்தைவிட தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு இறப்புக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. நேற்றைய கணக்கெடுப்பின்படி 213 நபர்கள் இறப்புக்குள்ளாகியுள்ளார்கள். மேலும் ,3 ஆயிரத்து 686 குடும்பங்களை சேர்ந்த 10 ஆயிரத்து 548 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

எனவே,யாழ்ப்பாண மாவட்டத்தில் பொதுமக்கள் இறுக்கமாக சுகாதார கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டிய தேவையுள்ளது. சுகாதார அமைச்சின் வழிகாட்டல் மற்றும் கொவிட் செயலணியின் வழிகாட்டலுக்கு அமைய பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்கள் பின்பற்றுவதுடன் மிக அவசிய தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியே வரவேண்டும் எனவும் குறித்த செயலணி வலியுறுத்தியுள்ளது.

மேலும்,யாழ்மாவட்டத்தில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும், அதேவேளை எழுந்து நடமாட முடியாத வயோதிபர்களுக்கு வீடுவீடாக சென்று தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளை சுகாதார தரப்பினர், கிராமசேவையாளர் மற்றும் இராணுவத்தினரும் கைகோர்த்து தடுப்பூசி நடவடிக்கைகளுக்கு உதவ முன்வந்துள்ளார்கள்.

தடுப்பூசிகளை விரைந்துபெற்றுக்கொள்வது எமது பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்துவதற்காக, இறப்புக்களை தவிர்க்கக்கூடிய நிலைமையை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. ஆகவே பொதுமக்கள் அரசாங்கத்தின் அறிவுறுத்தலின்படி தங்களையும் , சமூகத்தையும் பாதுகாக்கும் வகையில் தடுப்பூசியினைப் பெற்று தத்தமது பாதுகாப்பை உறுதிசெய்து கொள்வது அவசியமெனவும் குறித்தசெயலணி வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

சர்வதேச தரவுகளின் அடிப்படையில், நேற்றையநாளில் கொவிட் மரணங்கள் பதிவான நாடுகளின் பட்டியலில் இலங்கை 14 ஆவது இடத்தில் உள்ளது.

நேற்றையநாளில், சர்வதேச ரீதியில் அமெரிக்காவில் அதிக கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.

அங்கு ஆயிரத்து 230 இற்கும் அதிகமான மரணங்கள் அங்கு பதிவானதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனைத்துலக ரீதியில் நேற்றைய நாளில், 10 ஆயிரத்து 800 இற்கும் அதிகமான கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதற்கமைய, சர்வதேச கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 44 இலட்சத்து 75 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே

நாட்டில் மேலும் 4 ஆயிரத்து 472 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 7 ஆயிரத்து 757 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, மேலும் 2 ஆயிரத்து 163  பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்து சிகிச்சை நிலையங்களிலிருந்து வெளியேறினர்.

அதற்கமைய, இதுவரை நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கையும் 3 இலட்சத்து 48 ஆயிரத்து  930 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் தொற்றுக்கு உள்ளான 50 ஆயிரத்து 890 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


அமைச்சர் டக்ளஸின் பணிப்புரை - அக்கராயன் பல நோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு உழவு இயந்திரம் வழங்கிவைப்பு...
புதிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டால் உள்ளூராட்சி தேர்தல் - அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அறிவிப்பு...
அமைச்சர் டக்ளஸின் மற்றுமொரு கனவும் நனவானது – பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்ச...