நாட்டில் மீண்டும் புத்துயிர் பெறும் சுற்றுலாத்துறை – இவ்வருடம் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக ஈட்ட முடியும் என சுற்றுலாத்துறை அமைச்சு நம்பிக்கை!

Thursday, January 20th, 2022

நாட்டின் சுற்றுலாத்துறை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளமையானது, நாட்டிற்கு நம்பிக்கையைத் தருவதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வருடம் இலங்கைக்கு சுமார் 1.1 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து அதன் மூலம் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டுவதை இலக்காகக் கொண்டுள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சுற்றுலாத்துறை மூலம் இலங்கை வருடாந்தம் சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டுகின்றது.

3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அதன் மூலம் தங்களது வாழ்வாதாரத்தினை முன்னெடுத்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு முன்னர், நாட்டிற்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 2 மில்லியனாக இருந்தது, ஆனால் கொரோனா காரணமாக 2020 இல் 5 இலட்சத்து 7 ஆயிரத்து 704 ஆகவும், 2021 இல் ஒரு இலட்சத்து 94 ஆயிரத்து 495 ஆகவும் குறைவடைந்துள்ளது.

எவ்வாறாயினும், 2021 செப்டெம்பர் மாதத்திலிருந்து இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நிலையான வளர்ச்சியைக் காட்டியுள்ளது. ஜனவரி மாதத்தின் கடைசி 18 நாட்களில் மட்டும் 49 ஆயிரத்து 250 பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

ரஷ்யா, இந்தியா, உக்ரைன், இங்கிலாந்து மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளில் இருந்தே அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் இலங்கைக்கு வருவதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.

இதற்கமைய நாட்டின் கரையோரப் பிரதேசங்கள், கண்டி, தம்புள்ளை, அநுராதபுரம், பொலன்னறுவை மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் தற்போது ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தங்கியுள்ளனர்.

அந்தவகையில் எதிர்வரும் மாதங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் விரைவான அதிகரிப்பை எதிர்பார்க்க முடியும் என சுற்றுலா துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், புதிய விமானங்கள் மற்றும் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: