அடையாள அட்டை நடைமுறையை பின்பற்றுவது ஆபத்தானதானது – அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

Monday, April 27th, 2020

அடையாள அட்டையின் இறுதி எண்களின் அடிப்படையில் வெளியே செல்வதற்கு அனுமதி வழங்கும் நடைமுறையானது கொரோனா நோய்த்தொற்று பரவுகையை மேலும் அதிகரிக்கும் சந்தர்ப்பத்தை உருவாக்கும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கங்களின் அடிப்படையில் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் வெளியே செல்லும் நடைமுறை ஒன்றை காவல்துறையினர் அறிமுகம் செய்துள்ளனர்.

இந்த முறைமையினால் நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தொற்று மேலும் அதிகளவில் பரவக்கூடிய அபாய நிலைமை காணப்படுகின்றது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் குறித்த அடையாள அட்டை இலக்க நடைமுறைகாரணமாக ஒவ்வொரு தினங்களிலும் ஒவ்வொரு நபர்கள் வீட்டிலிருந்து வெளியே செல்வதற்கு அனுமதிப்பதனால் கொரோனா வைரஸ் தொற்று எல்லா வீடுகளையும் தாக்குவதற்கான சாத்தியங்கள் மிக அதிகளவில் ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த எச்சரிக்கையை கருத்திற்கொள்ளாவிட்டால் கொரோனா வைரஸ் தொற்று பரவுகையை கட்டுக்குள் வைத்துக் கொள்வதில் பாரிய சவால்களை எதிர்நோக்க நேரிடும் எனவும் குறித்த மருத்துவ சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் தற்போது புதிய பல இடங்களில் கொரோனா நோய்த் தொற்று பரவியதாக பதிவாகியுள்ள நிலையில் அந்த நோயாளிகளை அண்டிய பகுதிகளின் பரவுகை பற்றி மதிப்பீடு செய்யாது, இந்த அடையாள அட்டை நடைமுறை பின்பற்றப்படுவது ஆபத்தானதாகும் எனவும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: