நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் 25 பேர் உயிரிழப்பு – 2 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவிப்பு!

Thursday, November 11th, 2021

நாட்டில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 25 பேர் உயிரிழந்துள்ளதுடன், 60 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அத்துடன் பதுளை, நுவரெலியா, மாத்தளை, கம்பஹா, கொழும்பு, மன்னார், இரத்தினபுரி, களுத்துறை, புத்தளம், அநுராதபுரம், யாழ்ப்பாணம், காலி, கேகாலை, குருணாகல், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய 17 மாவட்டங்களில் உள்ள, 146 பிரதேச செயலகப் பிரிவுகள் காலநிலையால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன  எனவும் குறித்த மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

மேலும் இயற்கை அனர்த்தங்களில் சிக்கி இதுவரையில் 25 பேர் உயிரிழந்துள்ளனர் அவர்களில், கேகாலை, குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் தலா 6 பேரும் பதுளை மாவட்டத்தில் நால்வரும் மாத்தளை, காலி, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒவ்வொருவரும் உயிரிழந்துள்ளனர்.

மேலும் அனர்த்தங்கள் காரணமாக ஒருவர் காணாமல்போயுள்ளதோடு, 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதேநேரம், சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் 63 ஆயிரத்து 317 குடும்பங்களைச் சேர்ந்த 2  இலட்சத்து 22 ஆயிரத்து 590 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 23 வீடுகள் முழுமையாகவும், ஆயிரத்து 253 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: