நாட்டில் சுமார் 7,000 வீதி நிர்மாண திட்டங்கள் திடீரென இடைநிறுத்தம் – நிதியின்மையால் நெருக்கடி என தகவல்!

Wednesday, February 15th, 2023

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் 7,000 வீதி நிர்மாணத் திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அமைச்சர், மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் சீன எக்ஸிம் வங்கியிடமிருந்து கடன் கிடைக்கப்பெறாததால் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளது. கடவத்தையிலிருந்து மீரிகமவுக்கு கிலோமீற்றர் 40க்கு முற்பட்ட வீதி 158 பில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்படவிருந்தது. இந்நிலையில் அந்த வீதியின் நிர்மாணப் பணிகள் இடையில் நிறுத்தப்பட்டுள்ளது.

பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதால், கடவத்தையிலிருந்து மீரிகம வரையிலான பகுதிக்கான நிர்மாண மதிப்பீடு தற்போது 265 பில்லியனை விட அதிகரித்துள்ளது. ஹங்கேரிய நாட்டின் நிதி உதவியுடன் இரண்டு மேம்பாலங்களை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. இதற்கான நிதியைப்பெற்றுத் தருவதாக அந்த அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருந்தது.

அதற்கிணங்க, கெட்டம்பே மற்றும் கொகுவல பகுதியில் இரண்டு மேம்பாலங்களுக்கான நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அவ்வாறு அதற்கான நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டால் நுகேகொடைப் பகுதியைச் சுற்றியுள்ள மக்களுக்கு இடைஞ்சல்கள் ஏற்படலாம். அதற்கான தூண்கள் நடப்பட்ட நிலையில் அதனை நிறைவு செய்வதற்கு ஹங்கேரி அரசாங்கம் கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும் வரை நிதி வழங்காது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்டத்தின் கீழ் நெடுஞ்சாலை முதலாவது திட்டம் 2014 முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டு திட்டமாக தீர்மானிக்கப்பட்டது. 800 மில்லியன் அமெரிக்கன் டொலர் செலவில் 3055 கிராமிய வீதிகள் 400 நகர்ப்புற பாதைகளை நிர்மாணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அந்தவகையில் மொத்தமாக இந்த திட்டத்தில் 3455 பாதைகள் உள்ளடங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

00

Related posts: