நாட்டில் சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவேன் – சஜித்!

Thursday, July 25th, 2019

நாட்டில் வாழும் அனைத்து இன மக்களினதும் பிரச்சினைகளை எனது பிரச்சினையாக ஏற்று எதிர்காலத்தில் சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ உறுதியளித்துள்ளார்.

முல்லைத்தீவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களினதும் பிரச்சினைகளை எனது பிரச்சினையாக எடுத்துக்கொண்டு உங்கள் அனைவருக்கும் எதிர்காலத்தில் சிறந்த தலைமைத்துவத்தை நான் வழங்குவேன்.

அனைவரும் ஐக்கிய இலங்கை, ஒன்றிணைந்த இலங்கை, தேசியப் பாதுகாப்பு என்றெல்லாம் பேசுகின்றனர். இப்படியாக ஐக்கிய இலங்கையை நோக்கி ஒன்றிணைந்த இலங்கையை நோக்கி நாங்கள் நகரவேண்டுமானால் எங்களுக்குள் நாங்கள் சில விடயங்களைக் களையவேண்டும். சில விட்டுக்கொடுப்புக்களை மேற்கொள்ள வேண்டும்.

எங்களுக்குள்ளாக நாங்கள் அனைவரும் ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் நோக்கிச் செல்லவேண்டும். எங்களுக்குள்ளாக மதங்கள், ஜாதிகள், நிறங்கள் போன்றவற்றிலிருந்து நாம் விடுபடவேண்டும். நாங்கள் அனைவரும் இலங்கையினுடைய குடிமக்கள் என்ற எண்ணம் அனைவர் மனதிலும் ஏற்படவேண்டும்.

இந்த அரசு எம்மை இரண்டாம் தரப்பாகவே நடத்துகிறது. இரண்டாம் தரப்பாகவே நேசிக்கிறது என்று சிலர் எண்ணுகின்றனர். கதைக்கின்றனர். இது தவறாகும். இவ்வாறான எண்ணங்கள் சிலரால் திட்டமிட்டு ஊட்டப்படுகின்றன. நாங்கள் அப்படிப்பட்டவர்கள் அல்லர்.

நான் ஒரு சிறந்த பௌத்தன். பௌத்த மதத்தினுடைய கோட்பாடுகளைச் சரியான முறையில் கடைப்பிடிக்கின்றேன். யாரையும் உதாசீனப்படுத்தும்படியோ, ஒதுக்கும்படியோ, யாரிடமும் உயர்வு தாழ்வு பார்க்கும்படியோ புத்தபகவான் கூறவில்லை. புத்தபகவான் இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரையும் நேசிக்கும்படி கூறியிருக்கின்றார். அதையே நான் செய்கிறேன், செய்வேன்” என மேலும் தெரிவித்தார்.

Related posts: