நாட்டில் ஓகஸ்ட் மாதம்முதல் உக்காத பொலித்தீன் வகைகளை பயன்படுத்த முற்றாகத் தடை – சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவிப்பு!

Thursday, July 15th, 2021

இலங்கையில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம்முதல் உக்காத பொலித்தீன் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போது உற்பத்தி செய்யப்பட்டு உணவுப்பொருட்கள் பொதியிடுவதாக சந்தைக்கு விடப்பட்ட பொலித்தீன்கள் மாத்திரம் விற்பனை செய்வதற்கு ஒருமாத நிவாரண காலம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுற்றாடல் அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

உணவு வகைகளை சுற்றுவதற்காக பயன்படுத்தப்படும் மக்காத பொலித்தீன் (லன்சீட்) உற்பத்தி செய்தல் மற்றும் விநியோகித்தல் போன்ற நடவடிக்கைகள் எதிர்வரும் ஒகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து தடைசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

என்றாலும் தற்போது உற்பத்தி செய்திருக்கும் தொகையை விற்பனை செய்வதற்காக ஒருமாத நிவாரண காலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதன் பின்னர் உற்பத்தி, விற்பனை மற்றும் பாவனை செய்ய முடியுமாக இருப்பது மக்கும் லன்சீட் மாத்திரமாகும்.

அதேபோன்று தடைசெய்யப்படும் இவ்வாறான லன்சீட் வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றதா என தேடிப்பார்ப்பதற்காக மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் நுகர்வோர் சேவை அதிகாரசபையினால் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படும். தடை உத்தரவை மீறி யாராவது அதனை உற்பத்திசெய்தல் மற்றும் விநியோகித்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டால், அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

இதேநேரம் நாட்டில் நாளாந்தம் லன்சீட் பாவனை 12 மில்லியனில் இருந்து 15 மில்லியன் வரை அதிகரித்திருப்பதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் வெளிப்படுத்தப் பட்டிருக்கின்றதுடன் அதில் 99 வீதமானவை மீள் சுழற்சி செய்யப்படாது சுற்றுப்புற சூழலுக்கு கைவிடப்படுகின்றன.

அத்துடன் மக்கும் லன்சீட் தற்போது 10 தொழிற்சாலைகள் ஊடாக உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. அந்த தொழிற்சாலைகள் மக்காத லன்சீட் உற்பத்தி செய்தால், அவர்களது அனுமதி பத்திரத்தை தடைசெய்ய நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் கீழ் பதிவுசெய்திருக்கும் நிறுவனங்களுக்கு மாத்திரமே மக்காத லன்சீட் உற்பத்தி செய்வதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது. அதுவல்லாமல், மேலும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்கினால் ஆன 8 வகையான உற்பத்திகளை தடைசெய்யும் பட்டியல் அடங்கிய அமைச்சரவை பத்திரத்துக்கு கைச்சாத்திட்டுள்ளேன் என்றும் சுற்றாடல் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: