நாட்டின் நிலம் மற்றும் சமுத்திரத்தின் பாதுகாப்பு – ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவின் முதலாவது அறிக்கையை ஆறு மாதங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க அறிவுறுத்து!

Saturday, November 4th, 2023

நாட்டின் நிலம் மற்றும் சமுத்திரத்தின் பாதுகாப்பிற்கான மூலோபாய திட்டத்தை தயாரிப்பதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவின் முதலாவது அறிக்கையை எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற பாதுகாப்பு மீளாய்வுக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரைக்கும் பொறுப்பு வழங்கப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதலுக்கு உட்படுத்தி ஜனாதிபதியினால் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக்கவின் தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன், ஓய்வுபெற்ற முப்படைத் தளபதிகள் மற்றும் வெளிவிவகார அமைச்சு மற்றும் நிதி மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு அமைச்சின் ஆலோசகர்கள் உட்பட ஆறு உறுப்பினர்களைக் கொண்ட குழுவாகும்.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் சமுத்திரத்தின் பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அமைப்புகளின் அபிவிருத்தி தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும்; 2030ஆம் ஆண்டு இலக்காகக் கொண்ட மூலோபாய திட்டத்தை தயாரிக்கும் வேலைத்திட்டத்தையும் ஜனாதிபதி இந்தக் குழுவிடம் ஒப்படைத்துள்ளார்.

குறித்த குழு கூட்டத்தில் கலந்து கொண்ட சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியால் வழங்கப்பட்ட கடமைகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது குறித்து ஆறு மாதங்களுக்குள் அறிக்கையை வழங்குமாறு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: