தேங்காய் எண்ணெய் உற்பத்தியில் நாடு தன்னிறைவு – தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்ய வேண்டாம் – உள்ளூர் உற்பத்தியாளர்கள் வலியுறுத்து!

Friday, January 7th, 2022

அரசாங்கம் வழங்கும் அத்தியாவசிய பொருட்களுக்கான வரியில்லா சலுகையின் மூலம் தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள் பாரிய இலாபத்தை ஈட்ட முயற்சிப்பதாக அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

நுகர்வுக்கான தேங்காய் எண்ணெயை உற்பத்தி செய்வதில் நாடு தன்னிறைவு பெற்றுள்ளதால், தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்ய வேண்டிய அவசிய மில்லை எனவும் அச்சங்கத்தின் இணைப்பாளரான புத்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.

10,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான அறியப்படாத எண்ணெய் கையிருப்புகளை தேங்காய் எண்ணெய் எனக் கூறி வர்த்தகர்கள் இறக்குமதி செய்துள்ளதாகவும், தற்போது இலங்கை துறைமுக அதிகாரசபையின் சேமிப்புக் கிடங்குகளில் அவை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் வெளிநாட்டு கையிருப்புகளை வீணாக்காமல் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் எண்ணெயை வழங்குவதற்கான திறன் உள்ளதாக சங்க உறுப்பினர்கள் உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் உள்ளூர் நுகர்வோருக்கு பாதுகாப்பான தயாரிப்புகளை வழங்குவதன் மூலம் தொழில் துறையை நிலைநிறுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை சந்தைக்கு வெளியிடுவதில் இறக்குமதியாளர்கள் வெற்றி பெற்றால் பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்களால் பொருட்களை விற்பனை செய்ய முடியாது. அத்துடன் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இறக்குமதியாளர்கள் அஃப்லாடொக்சின் அடங்கிய தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்ததைப் போன்ற ஒரு நிலைமை மீண்டும் உருவாக்கப்படும் என அவர் மேலும் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: