நவீனமயமாகிறது யாழ்ப்பாணப் பேருந்து நிலையம்!

Thursday, January 31st, 2019

யாழ்ப்பாண மையப் பேருந்து நிலையம், அடுக்குமாடி வாகனத் தரிப்பிடம், வர்த்தகத் தொகுதி என்பவற்றை உள்ளடக்கியதாகவும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை மற்றும் நவீன சந்தை ஆகியவற்றை இணைக்கும் மேம்பாலத்தை உள்ளடக்கியதாகவும் புதிதாக அமைக்கப்படவுள்ளது. இதற்காக பெருநகர மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு 400 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளது.

யாழ்ப்பாண மையப் பேருந்து நிலையம் தற்போது அமைந்துள்ள காணியிலேயே நவீனமயப்படுத்தப்பட்ட பேருந்து நிலையம் உருவாக்கப்படவுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம் அளவில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் மக்கள் பாவனைக்கு கையளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் யாழ் நகர அபிவிருத்தி அதிகார சபையால் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

மையப்பேருந்து நிலையத்தை மறுசீரமைக்கும் காலப்பகுதியில் யாழ்ப்பாணம் தொடருந்து நிலையத்துக்கு முன்பாகவுள்ள காணியில் மையப் பேருந்து நிலையம் தற்காலிகமாக இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நவீனமயமாக அமைக்கப்படும் மையப் பேருந்து நிலையத்தில் கீழ்த் தளத்தில் பேருந்து சேவைகள் நடைபெறும். தற்போதுள்ளவாறாக அல்லாமல் பயண நேரத்துக்கு சில நிமிடங்கள் முன்னதாக பேருந்து நிலையத்துக்கு பேருந்துகள் வந்து பயணிகளை ஏற்றிச் செல்லும். நீண்ட நேரத்திற்கு பேருந்துகள் தரித்து நிற்காது. முதலாவது தளத்தில் வர்த்தகத் தொகுதி அமையவுள்ளது. இரண்டாவது தளத்தில் வாகனத் தரிப்பிடம் அமைக்கப்படவுள்ளது. வாகனத் தரிப்பிடத்திலிருந்து நேரடியாக யாழ் போதனா மருத்துவமனைக்கும் நவீன சந்தைக்கும் மேம்பாலம் கட்டப்படவுள்ளது.

Related posts: