சிங்களமயமாதலை கூட தடுக்க முடியாதவர்கள் அரசுக்கு முண்டு கொடுப்பது ஏன்- முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் தவராசா!

Friday, February 1st, 2019

வவுனியா வடக்கு பிரதேசத்திற்குட்பட்ட கற்சல்சமணங் குளத்தையும் அதனை அண்டிய பிரதேசங்களையும் சப்புமல்கஸ்கந்த என பெயர் மாற்றி சிங்களக் குடியேற்றத்தை ஏற்படுத்தம் முயற்சிகள் ஒருபுறத்திலும், நெடுங்கேணி பிரதேசத்திற்குட்பட்ட ஊற்றுக் குளம் என்ற தமிழ்க் கிராமத்தில் காடுகள் அழிக்கப்பட்டு அவ்விடத்தில் சிங்கள மக்களை குடியேற்றும் நடவடிக்கைகள் மறுபுறத்திலும் அண்மைக்காலமாக தீவிரமாக நடைபெறுவதாக செய்திகள் வெளியாகுகியுள்ளன.

அத்துடன் ஊற்றுக்குளத்தில் ஒரு பௌத்த துறவி இரு காவலாளிகளுடன் தங்கியுள்ளதாகவும் அறியவருகின்றது.

இதேவேளை எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல தொல்பொருள் திணைக்களம் சமணங்குளம் விநாயகர் ஆலயத்தினை வர்த்தமானி அறிவித்தலின் மூலம் தொல்பொருள் பிரதேசமாக பிரகடனம் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அறியக்கிடக்கின்றது.

நாயாறு நீராவியடி ஏற்றத்தில் பல்லாண்டுகாலமாக இருந்த பிள்ளையார் சிலைக்கு அண்மையில் புத்தர் சிலை ஒன்றை தொல்பொருள் திணைக்களத்தின் உதவியுடன் அண்மையில் நிறுவியிருப்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

தொல்பொருள் சான்றுகள் இருப்பதாக கருதும் இடங்களை பாதுகாத்து மேலும் பாதிப்படையாத வகையில் பராமரிப்பதுவே தொல்பொருள் திணைக்கள சட்டமூலத்தின் கீள் திணைக்களத்திற்கான கடமையாகும்.  அவ்வாறான இடங்களில் புதிய சிலைகளை அமைப்பதற்கு தொல்பொருள் திணைக்களத்திற்கு சட்டத்தில் அதிகாரம் இல்லை. இருந்தும் தொல்பொருள் திணைக்களம் அவ்வாறாக செயல்ப்படுபவர்களின் பின்னால் நின்று செயற்படுட்டு வருகின்றது.

வனங்களை பாதுகாப்பதாக பல தமிழ் பேசும் மக்களை அவர்களது பூர்வீக இடங்களில் குடியேறவிடாது தடுத்துவரும் வனவிலங்கு இலாகா, பிக்குமார் காடழிப்பில் ஈடுபடும்போது மட்டும் மௌனமாக இருக்கின்றனர்.

இவ்வாறான அநீதிச் செயற்பாடுகளை நிறுத்துவதற்கு அரசியல் அமைப்பு மாற்றம் தேவையில்லை. சாதாரண ஒரு அமைச்சர் நினைத்தால் இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

இதைக்கூட செய்விக்கமுடியாமல் நாம் இந்நாட்டின் ஜனநாயகத்தையும் பாதுகாத்து இந்த அரசையும் தெரடர்ந்து  பாதுகாப்பதில் என்ன பயன்?

அரசியல் அமைப்பு வரும் அரசியல் அமைப்பு வரும் என்று கூறிக்கொண்டு எமது பிரதேசங்கள் பறிபோவதை தொடர்ந்தும் பார்த்துக்கொண்டிருக்காமல் இவற்றை தடுப்பதற்கு தமிழ் தலைவர்கள் உடன் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

தமிழ் முற்போக்கு கூட்டணி தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்கு இந்த அரசு அநீதி செய்ததை அடுத்து அதை தாங்கிக்கொள்ள முடியாது தமது பதவிகளை இராஜினாமா செய்ய கூட தயாரென்று அண்மையில் அறிவித்திருந்தது. அவர்களைப்போல வடக்கு கிழக்கு மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளும் அரசு இவ்விடையங்களை தன்னும் தடுப்பதற்கு முன்வராவிட்டால் தொடர்ந்து ஆதரவு தருவதனை மீள்பரிசீலனை செய்யவேண்டும்.

Related posts: