நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு!
Friday, July 24th, 2020
வரலாற்று புகழ்மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
செங்குந்தர் பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை சம்பிரதாயப் பூர்வமாக ஆலயத்தில் ஒப்படைக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாகும்.
அதனடிப்படையில் யாழ் சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் காலை 9 மணிக்கு நடைபெற்ற விஷேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து அங்கிருந்து கொடிச்சீலை சிறிய இரதத்தின் மூலம் பருத்தித்துறை வீதி ஊடக எடுத்து செல்லப்பட்டு காலை 9.30 மணியளவில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தினை வந்தடைந்தது.
அங்கு ஆலயத்தின் வெளிவீதி உலாசென்று சுபநேரத்தில் பூஜைகள் இடம்பெற்று கொடிச்சீலை நல்லூர் ஆலய பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டது.
இதேவேளை நாளை காலை பத்து மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பம் ஆகும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் கடுமையான சுகாதார கட்டுப்பாடுகளுடன் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


