பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் செப்டம்பர் 07 ஆம் திகதியுடன் நிறைவடையும் – பாடப் புத்தகங்கள் அச்சிடுவதை துரிதப்படுத்துமாறும் கல்வி அமைச்சர் அமைச்னின் அதிகாரிகளுக்கு பணிப்புரை!

Sunday, September 4th, 2022

2022 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் செப்டம்பர் மாதம் 07 ஆம் திகதியுடன் நிறைவடையும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி பாடசாலைகளின் இரண்டாவது தவணை செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்புக்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதியின் பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், சமர்பிக்கப்பட்டுள்ள மேன்முறையீடுகள் மற்றும் விண்ணப்பங்கள் தொடர்பான விடயங்கள் பாடசாலைகளில் உள்ள வெற்றிடங்கள் மற்றும் விண்ணப்பதாரிகளின் கோரிக்கைகளுக்கு அமைய பரிசீலனை செய்து அதற்கான தீர்மானங்கள், எதிர்வரும் காலங்களில் அறிவிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இதனிடையே 2023 ஆம் ஆண்டு நாடு முழுவதும் உள்ள அரசாங்க பாடசாலைகளின் மாணவர்களுக்கு கல்வி அமைச்சகம் இலவச பாடப்புத்தகங்களை வழங்கும் என்று தெரிவித்துள்ளது.

அரசாங்கம் இந்த நோக்கத்திற்காக 16,483 மில்லியன் ஒதுக்கியுள்ளதோடு அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்தினால் 45 சதவீத பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஐம்பத்தைந்து வீதமான பாடப்புத்தகங்கள் தனியார் துறையினரால் அச்சிடப்படும் என குருநாகல் மாவட்ட சிரேஷ்ட கல்விப் பணிப்பாளர் டபிள்யூ.எம். பாலசூரிய கூறியுள்ளார்.

குருநாகல் மாகாண கல்வி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குருநாகல் மாவட்ட பாடசாலை அதிபர்கள் கூட்டத்தில் பாலசூரிய கூறியதாவது “அடுத்த கல்வியாண்டு 2023 க்கு முன்னதாக மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை அச்சிடுவதை துரிதப்படுத்துமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமயந்த அமைச்சு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: