நலன்புரி செயற்பாடுகளுக்கு 187 பில்லியன் ரூபா ஒதுக்கீடு – இவ்வருடத்துக்கும் ஒதுக்குமாறு சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்துக்கு அறிவிப்பு!

Friday, May 5th, 2023

சமுர்த்தி, விசேட தேவையுடையோர், சிரேஷ்ட பிரஜைகள், சிறுநீரக நோயாளர்கள் உள்ளிட்ட சமூக பாதுகாப்புக்கு இந்நிதி பயன்பாடு சமுர்த்தி, விசேட தேவையுடையோர், சிரேஷ்ட பிரஜைகள், சிறுநீரக நோயாளர்கள் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு வலயமைப்புக்காக இவ்வருடம் குறைந்தபட்சம் 187 பில்லியன் ரூபா நிதியை பயன்படுத்துமாறு சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு இதற்காக அரசாங்கம் 142 பில்லியன் ரூபாவை மாத்திரமே செலவிட்டுள்ளது.

இந்த வருடத்தில் சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மேலதிகமாக 45 பில்லியன் ரூபாவை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் இணக்கம் தெரிவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் நலன்புரி பிரதிபலன்களை குறைக்காமல், முன்னர் இருந்ததையும் விட அதிகமாக பெற்றுக்கொடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நிதி அமைச்சர் என்ற வகையில் பணிப்புரைகளை வழங்கியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். 

 இதற்கமைய கடந்த வருடத்தைவிட அதிக நிதியை இவ்வருடம் ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம், எந்த சந்தர்ப்பத்திலும் சமூக நலன்புரிக்கான செலவுகளை குறைப்பதற்கு நடவடிக்கையெடுக்காது என்பதை உறுதிப்படுத்திய இராஜாங்க அமைச்சர், நலன்புரி பிரதிபலன்களை பெற்றுக்கொள்வதற்காக தெரிவு செய்யப்படுவோர் பாரபட்சமற்ற முறையின் கீழ் தெரிவாகின்றனர்.

இது தொடர்பில் கடந்த சில தினங்களாக மதிப்பீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் தெரிவுசெய்யப்பட்டுள்ள பயனாளிகளுக்கு அடுத்த மாதம்முதல், பிரதிபலன்களை வழங்குவதற்கு நடவடிக்கை யெடுக்கப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.

2007 ஆம் ஆண்டில் நாட்டின் தேசிய உற்பத்தி வீதத்தில் 02% நலன்புரி விடயங்களுக்காக செலவிடப்பட்டுள்ளது. இந்தவகையில், இந்த வருடத்தில் தேசிய உற்பத்தி வீதத்தில் 18% வரை அதை அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


அரசாங்கத்தின் சீனிக்கான வரி குறைப்பு மோசடியல்ல - இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க சுட்டிக்காட்டு!
ஜனாதிபதி விசேட அனுமதி - எதிர்வரும் 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் யாழ். பல்கலை பணியாளர்களுக்கு தடுப்பூச...
துறைமுகத்தில் தேங்கியுள்ள 2, 000 கொள்கலன்களை விடுவிக்க நடவடிக்கை: இந்திய இறக்குமதிக்கு முன்னுரிமை என...