தண்ணீர்த் தொட்டிகளைக் கட்டாயம் 3 நாள்களுக்கு ஒருதடவை கழுவவும் – பிராந்திய சுகாதாரப் பிரிவு!

Wednesday, April 4th, 2018

பாடசாலைகளில், வீடுகளில் தண்ணீர் தொட்டிகளில் டெங்குக் குடம்பி பரவி வருகின்றமை சிக்கலுக்குரிய விடயமாகியுள்ளது. என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்று நோய்த் தடுப்புப் பிரிவினர் பொது மக்களுக்கு அறிவுறுத்துகின்றனர்.

மேலும் அவர்கள் இது தொடர்பில் தெரிவிக்கையில் –

3 நாள்களுக்கு ஒருதடவை கட்டாயம் தண்ணீர் தொட்டியிலுள்ள தண்ணீரைத் திறந்து விட்டு தொட்டியின் சுவர்ப் பகுதியை உரஞ்சிக் கழுவுதல் வேண்டும். தண்ணீரைத் திறந்து விட்டாலும் சுவர்ப் பகுதியை உரஞ்சாது விடில் குடம்பிகள் சுவரில் ஒட்டியிருந்து தண்ணீர் நிரப்பும் போது மீண்டும் உயிர்த்துவிடும். நுளம்பு பெருகும். எனவே இந்த விடயத்தில் பொதுமக்கள் அதிக கவனம் செலுத்துங்கள்.

மழை குறைந்ததும் டெங்கு எதிர்பார்த்தளவில் குறையவில்லை. கடந்த வருடம் முதல் காலாண்டில் டெங்கு பரவல் அதிகளவில் காணப்பட்டுள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இந்த வருடம் நிறைவடைந்த முதற்காலாண்டு வரையான காலத்திலும் டெங்கு குறைவடைந்துள்ளபோதும் எதிர்பார்த்தளவில் குறைவடையவில்லை.

கடந்த வருட ஜனவரியில் 596 பேரும், பெப்ரவரியில் 683 பேரும், மார்ச்சில் 863 பேரும் டெங்குத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த வருட ஜனவரியில் 637 பேரும் பெப்ரவரியில் 310 பேரும் மார்ச்சில் 160 பேரும் டெங்குத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு பரவுவது அதிகரித்த நிலையில் காணப்படுவதற்கும் கட்டுப்படுத்தும் நடவடிக்கை இடம்பெற்றும் அவை கட்டுப்பாட்டுக்குள் வராதிருக்கவும் முக்கிய காரணம் தண்ணீர் தொட்டிகளே.

தண்ணீர் தொட்டிகளைப் பலர் வாரக்கணக்கில் கழுவுவதில்லை. அவ்வாறான சம்பவங்கள் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் பலவற்றிலும் அவதானிக்கப்பட்டுள்ளபோதும் கரவெட்டி பிரிவில் அதிகளவில் அவதானிக்கப்பட்டுள்ளன. அதனால் தண்ணீர் தொட்டிகளில் நுளம்புகள் முட்டையிடுகின்றன.

3 தொடக்கம் 5 நாள்களில் அவை குடம்பியாகி விடுகின்றன. 10 ஆவது நாள்களில் அல்லது அதற்கு முன்னர் அவை நுளம்பாகி விடுகின்றன.

இதனைத் தடுக்க 3 நாள்களுக்கு ஒரு தடைவ பாடசாலைகள் மற்றும் வீடுகள் உள்ளிட்ட இடங்களிலுள்ள தண்ணீர் தொட்டிகளைக் கழுவுதல் வேண்டும். அவை மட்டுமன்றி சிரட்டைகள், பிளாஸ்ரிப் பொருள்களில் தண்ணீர் தேங்குகின்றமை, குளிர்சாதனப் பெட்டிகளில் பின் பகுதியில் தண்ணீர் தேங்க நின்று அவற்றின் ஊடாகவும் நுளம்புகள் பரவிப் பெருகுகின்றன.

எனவே இந்த விடயத்தில் பொதுமக்கள், கிராம அமைப்புகள், பாடசாலைகள் கவனம் செலுத்த வேண்டும். என்று சுகாதாரப் பகுதியினர் மேலும் தெரிவித்தனர்.

Related posts: