தொழில்வாய்ப்பை பெற்றுத் தருவதாகக்கூறி நிதி மோசடியில் ஈடுபடுவோரிடம் சிக்க வேண்டாம் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

Thursday, August 2nd, 2018

தென்கொரியாவுக்கு தொழில்வாய்ப்பை பெற்றுத் தருவதாகக்கூறி நிதி மோசடியில் ஈடுபடுவோரிடம் சிக்கிக்கொள்ள வேண்டாம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
கொரிய மனிதவள திணைக்களத்தின் ஆலோசனைக்கமைய தமது பணியகத்தின் ஊடாக மாத்திரமே தென்கொரிய தொழில்வாய்ப்புக்கான ஆட்சேர்ப்பு இடம்பெறுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த தொழில்வாய்ப்பிற்காக அரசியல் ரீதியாகவோ அல்லது வேறு தனிப்பட்ட நபர்களுக்கோ எவ்வித அழுத்தத்தையும் வழங்க முடியாது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் தெரிவுசெய்யப்பட்ட தகுதிவாய்ந்த பயிற்சி ஆலோசகர்களினால் மாத்திரமே கொரிய தொழில்வாய்ப்பிற்கு செல்வதற்கு முன்னரான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இந்த நிலையில், கொரியாவில் தொழில்வாய்ப்பை பெறும் எதிர்பார்ப்பில் உள்ளோருக்கு மொழிப் பயிற்சியை வழங்குவதற்கு எந்தவொரு நிறுவனமோ அல்லது தனிநபரோ பெயரிடப்படவில்லை.

இவ்வாறான நிலையில், கொரிய தொழில்வாய்ப்பை பெற்றுத் தருவதாகத் தெரிவித்து, மோசடியில் ஈடுபடுபவர்களிடம் சிக்கிக்கொண்டு பணத்தை வழங்க வேண்டாம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவுறுத்தியுள்ளது.

Related posts: