புதிய சவால்களுக்கு முகம்கொடுக்க தகுந்த வகையில் பாதுகாப்பு தரப்புகளையும் நவீனமயப்படுத்த வேண்டும் – தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க வலியுறுத்து!

Thursday, August 17th, 2023

புதிய சவால்களுக்கு முகம்கொடுக்க தகுந்த வகையில் பாதுகாப்பு தரப்புகளையும் நவீனமயப்படுத்த வேண்டும் என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட டோனியர் 228 கடல்சார் கண்காணிப்பு விமானத்தின் வருடாந்த பராமரிப்பு சேவைகளுக்காக இந்தியாவிற்கு அனுப்பி வைத்தல் மற்றும் அதற்கு மாற்றீடாக கடல்சார் கண்காணிப்பு டோனியர் விமானமொன்றை இலங்கை விமானப்படைக்கு கையளிப்பதற்காக நேற்று கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் விசேட நிகழ்வொன்று இடம்பெற்றது.

இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு இணங்க, இந்திய கடற்படையின் டோனியர் 228 கடல்சார் கண்காணிப்பு விமானம், 2022 ஓகஸ்ட் 15 ஆம் திகதி இரண்டு வருட காலத்திற்கு இலங்கை விமானப்படையிடம் கையளிக்கப்பட்டது.

மேற்படி கடல்சார் கண்காணிப்பு விமானமானது ஒரு வருடம் தொடர் சேவையை முன்னெடுப்பதற்கு சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்து.

இந்த விமானம் வருடாந்த பராமரிப்புக்காக இந்தியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளதோடு, அந்த விமானத்திற்கு மாற்றீடாக மற்றுமொரு டோனியர் 228 கடல்சார் கண்காணிப்பு விமானம் இலங்கை விமானப்படைக்கு நேற்று வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோருடன் இந்திய உயர்ஸ்தானிகராலயப் பிரதிநிதிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

இதில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, இலங்கை பொருளாதாரச் சரிவை எதிர்கொண்ட போது இந்தியாவின் நட்புக்கும் அப்பாற்பட்ட சகோதரத்துவத்தை உணர முடிந்ததாகத் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் மேற்கொண்டிருந்த இந்திய விஜயத்தின் பலனாக இருநாடுகளினதும் உறவு மேலும் வலுப்பெற்றுள்ளது என்றும் அதற்கமைய எதிர்காலத்திலும் இருநாடுகளும் நெருங்கிய ஒத்துழைப்புடன் பணியாற்ற தீர்மானித்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார.

கடந்த காலத்தில் கடினமாக நிலைமைக்கு தள்ளப்பட்டிருந்த போது, கடல்சார் பணிகளுக்கு அவசியமான எரிபொருளை அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் நமது விமானப்படைக்கும் கடற்படைக்கும் வழங்கியிருந்தன என்பதையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

புதிய தொழில்நுட்பங்களுக்கு அமைய விமானங்களையும் வடிவமைக்க வேண்டிய தேவை இருந்தாலும், எமது பொருளாதாரச் சரிவினால் அதனை செய்ய முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

எமது கடல்சார் நடவடிக்கைகளை கண்காணிக்கும் போது, சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரம், ஆயுத கடத்தல் மற்றும் ஆள்கடத்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் முக்கியமானதாக காணப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

புதிய சவால்களுக்கு முகம்கொடுக்க தகுந்த வகையில் பாதுகாப்பு தரப்புகளையும் நவீனமயப்படுத்த வேண்டும் என்றும் அந்த நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டம் ஜனாதிபதியால் தற்போதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: