தேவாலயங்கள் மீதான தாக்குதல் குறித்து வெளியான தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டவை அல்ல – பாதுகாப்பு செயலர் அறிவிப்பு!
Wednesday, September 29th, 2021
நாட்டில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என ஊடகங்களில் வெளியாகும் தகவல், குறித்த அதிகாரிகளால் ஆராய்ந்து பார்க்காமலும், உறுதிப்படுத்தாமலும் வெளியிடப்பட்டதொரு தகவல் மாத்திரமேயாகும் எனப் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் குழப்பமடைய தேவையில்லை எனவும் பாதுகாப்பு செயலாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, வத்தளை, போப்பிட்டிய தேவாலயத்தின் மீது பயங்கரவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்படக்கூடும் என்று தமக்கு கிடைத்த தகவலை அறிவிப்பதற்காகக் கடற்படையைச் சேர்ந்த இருவர் நேற்று குறித்த தேவாலயத்துக்கு சென்றுள்ளனர்.
அதன்போது, தேவாலயத்தில் எவரும் இல்லாதிருந்ததால், அங்கிருந்த பணிப்பெண் ஒருவரிடம் அவ்விடயத்தை கூறிச்சென்றிருந்தனர்.
அச்சந்தர்ப்பத்தில் குறித்த தேவாலயத்துக்குப் பொறுப்பான அருட்தந்தை தேவாலயத்தில் இருந்திருக்கவில்லை எனவும், அதன்பின்னர் தேவாலயத்துக்குவந்த அவர் குறித்த தகவல் தொடர்பில் ஆராய்ந்துபார்த்தபோது, வேறு எந்த தேவாலயத்துக்கோ, ஆயர் இல்லத்துக்கோ இது போன்ற எச்சரிக்கை கிடைத்திருக்கவில்லை என்பது தெரியவந்திருந்தது.
எனினும், இந்த அறிவித்தலின் பின்னர் குறித்த தேவாலயத்துக்கு வந்த மேலுமொரு கடற்படை அதிகாரி குறித்த எச்சரிக்கை தொடர்பில் விபரித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, இவ்விதமான அடிப்படையற்ற தகவல்கள் தொடர்பில் பொதுமக்கள் எவ்வித அச்சமடைய தேவையில்லை என பாதுகாப்பு செயலாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


