தேர்தல் சீர்திருத்தங்கள் உரிய நேரத்தில் நிறைவேற்றப்படாவிட்டால் 2018 இல் பயன்படுத்தப்பட்ட சட்ட வழிகாட்டலின் கீழ் உள்ளூராட்சித் தேர்தல் – ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Monday, September 26th, 2022

தேர்தல் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதாகக் கூறி உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதைத் தேர்தல் ஆணையம் தாமதப்படுத்தாது என்றும், 2022 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இளைஞர் பட்டியலை இணைத்து, உள்ளூராட்சித் தேர்தலுக்கான திகதியை நவம்பரில் அறிவிக்க எதிர்பார்ப்பதாக அதன் தலைவர் எஸ்.ஜி.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழு பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரிக்குள் 18 வயதை நிறைவு செய்யும் இளைஞர்களின் புதிய விண்ணப்பங்களை வருடாந்த வாக்காளர் பதிவேடுக்கான துணைப் பட்டியலில் சேர்க்கும்.

2022 ஆம் ஆண்டுக்கான பொதுவான வாக்காளர் பதிவேட்டை அக்டோபர் 31 ஆம் திகதிக்குள் புதிய வாக்காளர் பட்டியலுடன் இறுதி செய்ய எதிர்பார்க்கிறோம்.

அதன் பின்னர் பெப்ரவரி முதல் செப்டம்பர் வரை 18 வயது பூர்த்தியான புதிய விண்ணப்பதாரர்களின் மற்றுமொரு பட்டியலைத் தயாரிப்போம்.

இந்த பட்டியல் உட்பட 2022 ஆம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நவம்பர் நடுப்பகுதியில் தயாராகிவிடும்.

எனவே, நவம்பர் மாத இறுதியில் உள்ளூராட்சி அமைப்புகளுக்கான தேர்தலுக்கான திகதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் நிலையில் இருக்கும்” என புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தேர்தலுக்கு முன் தேர்தல் சீர்திருத்தங்களை உள்ளூராட்சி சபைகளின் தேர்தல் கட்டளைச் சட்டத்தில் இணைத்தால் நல்லது எனவும், ஆனால் உள்ளூராட்சி தேர்தலை சரியான நேரத்தில் நடத்த தடையாக இருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

“தேர்தல் சீர்திருத்தங்கள் நடைமுறையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், 2023 மார்ச்சுக்கு முன் உள்ளூராட்சித் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் சட்டத்தின்படி செப்டம்பர் 20 ஆம் திகதிக்குப் பின்னர் எந்த நேரத்திலும் உள்ளூராட்சித் தேர்தலை அறிவிக்க தேர்தல் ஆணையகத்திற்கு அதிகாரம் உள்ளது. எனவே, உள்ளூராட்சி தேர்தலை ஒரு நாள் கூட தாமதப்படுத்தும் எண்ணம் தேர்தல் ஆணையத்திற்கு இல்லை” என்றும் புஞ்சிஹேவா வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் தேர்தல் சீர்திருத்தங்கள் உரிய நேரத்தில் நிறைவேற்றப்படாவிட்டால், 2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டபோது பயன்படுத்தப்பட்ட தேர்தல் விதிமுறைகள் மற்றும் சட்ட வழிகாட்டலின் கீழ் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது என் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: