தேர்தல் காலங்களில் சமத்துவம் பேசிப் பயனில்லை – ஈ.பி.டி.பியின் யாழ். மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன்!

Monday, June 3rd, 2019

கிறீஸ்தவ, இந்து சமய மக்களது வாக்குகளால் நாடாளுமன்றம் சென்ற தமிழ் தலைவர்கள் இலங்கை பௌத்த நாடு எனப் பிரகடனப்படுத்துவதில் நியாப்படுத்துவதில் காட்டிய அக்கறை ஏனைய சமயங்களை மலினப்படுத்தியுள்ளது என பருத்தித்துறை பிரதேசசபையின் முன்னாள் தவிசாளரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட மேலதிக நிர்வாகச் செயலாளருமான ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்தார்.

வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று புனித பிலிப்பு நேரியார் தேவாலயத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (2019.06.02) காலை 8.45 மணியளவில் பங்குத்தந்தை வண.யோ.ப.ஜோதிநாதன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. அந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சுமார் 150 வருடங்கள் சிறப்பு வாய்ந்த புனித பிலிப்பு நேரியார் செம்பியன்பற்று பங்கு மக்களுக்கு மட்டும் பாதுகாவலர் அல்ல. இந்து மக்களுக்கும் அவர் பாதுகாவலர். ஆன்மீக நூல்களான பைபிள், குரான், பகவத்கீதை மகாவம்சம்  அனைத்தும் அகிம்சையையே போதிக்கின்றன. ஆனால் நாம் அப்போதனைகளை பின்பற்றுகிறோமா என்பதும் எம் முன்னால் உள்ள கேள்வி. நாம் மதங்களின் பேரால் விலகி நிற்கக் கூடாது. எல்லோரும் ஒற்றுமையுடன் ஐக்கியப்பட்டு மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.

இலங்கை ஒரு பௌத்த நாடு என தமிழ் தலைவர்கள் எனக் கூறிக் கொள்பவர்கள் அரசியலமைப்பில் திணித்துள்ளனர். அதை அங்கீகரித்து விட்டு நியாயப்படுத்தவும் முயல்கின்றனர். ஒரு மதம் இன்னுமொரு மதத்தின் ஆளுமை செலுத்த இது வழி வகுக்கின்றது. இது ஏனைய சமயங்களை மலினப்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

இதேநேரம் வணக்கத்திற்குரிய கிறிஸ்தவ ஆயர்கள், பங்குத்தந்தைகள், அருட் சகோதர சகோதரிகள் மற்றும் இந்து சமய குருமார்கள் அனைவரது ஆசிகள் பெற்று தேர்தலில் சமய வாக்கு வசூலிக்கும் கூட்டமைப்பினர் பௌத்தத்திற்கு சோரம் போவதும் பின்னர் தேர்தல் காலங்களில் சமத்துவம் என்றும் எம்மதமும் சம்மதம் என்றும் கபடத்தனம் பேசுவதும் அம்பலமாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.       

Related posts: